×

வாட்டும் வெயிலிலும் முழு கொள்ளளவு எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி

குன்றத்தூர்: சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்க பொதுப்பணி துறை மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மழைக் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நீர்மட்டம் உயர்வது வழக்கம். எனினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது வெயில் அதிகரிக்க துவங்கியபோதும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன்மூலம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதற்கு பூண்டி ஏரி நிரம்பியதால், அங்கிருந்து நாள்தோறும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி உயரத்தில், தற்போது 23.50 அடி உயரம் வரை நீர் நிறைந்துள்ளது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், பூண்டி ஏரியில் இருந்து நீர்வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு நிலவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏரி நிறைந்திருப்பதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post வாட்டும் வெயிலிலும் முழு கொள்ளளவு எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam Lake ,Chennai city ,Public Works Department ,Chembarambakkam Lake… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்!