×

கேரளாவில் போக்குவரத்து துறை ஜீப்புக்கு அபராதம் விதிக்க வைத்த வியாபாரி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஆயூர் பகுதியில் மோட்டார் வாகனத் துறையினர் வாகனங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அவர்கள் உடனுக்குடன் அபராதம் விதித்தனர். இதை கவனித்த அப்பகுதியில் கடை வைத்திருக்கும் அல்தாப் என்பவர் போக்குவரத்து அதிகாரிகள் வந்த ஜீப்புக்கு புகை சான்றிதழ் இருக்கிறதா என பரிவாகன் இணையதளத்தில் பரிசோதித்தார்.

இதில், அந்த வாகனத்திற்கு ஜனவரி மாதமே புகை பரிசோதனை தேதி காலாவதி ஆனது தெரியவந்தது. உடனடியாக சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் சென்ற அல்தாப், விதிகளை மீறும் எல்லா வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கிறீர்கள். உங்களது வாகனத்திற்கு புகை பரிசோதனை தேதி காலாவதி ஆகிவிட்டது. எனவே உங்களுடைய வாகனத்திற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அதை நாங்கள் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறோம் என்று அந்த அதிகாரி கூறினார். நான் பரிவாகன் இணையதளத்தில் பரிசோதித்து பார்த்து விட்டேன். எனவே அபராதம் விதிக்காமல் இங்கிருந்து செல்ல முடியாது என்று கூறி அல்தாப் ஜீப்பின் முன்னால் நின்று கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த அதிகாரி, தான் வந்த ஜீப்புக்கு புகை பரிசோதனை சான்றிதழ் உள்ளதா என்று பரிவாகன் இணையதளத்தில் பரிசோதித்தார்.

அப்போது அல்தாப் கூறியது போல் ஜனவரி மாதமே புகை பரிசோதனை தேதி காலாவதியானது தெரியவந்தது. இதையடுத்து அல்தாப்பிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அந்த அதிகாரி, தான் வந்த போக்குவரத்து துறை ஜீப்புக்கு ரூ.2000 அபராதம் விதித்தார். இதன்பிறகே அவர்களை அங்கிருந்து செல்ல அல்தாப் அனுமதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post கேரளாவில் போக்குவரத்து துறை ஜீப்புக்கு அபராதம் விதிக்க வைத்த வியாபாரி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Ayur ,Kollam ,Dinakaran ,
× RELATED வீட்டுக்கு தீ வைத்து கணவன் தற்கொலை: மனைவி, மகள் அலறி ஓட்டம்