திருவள்ளூர், பிப்.23: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை கடைகளில், விதை ஆய்வு துணை இயக்குனர் ஜி.ரவி, ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். மேலும், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் ஆய்வு நடத்தினர். பிறகு ரவி கூறியதாவது: விதை விற்பனை குறித்து முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். விதை சேமிப்பு களத்தினை சுகாதாரமான முறையில் பராமரிக்காவிட்டால், உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
சான்று பெற்ற, அனுமதி பெற்ற நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீறினால், விதைகள் சட்டம் 1966ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை உரிமம் மற்றும் விற்பனை பட்டியலை, விவசாயிகளின் பார்வையில் தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். மேலும், விவசாயிகள் உரிமம் பெறாதவர்களிடம் இருந்து விதைகள் வாங்க வேண்டாம். அரசால் அறிவிக்கப்பட்ட தரமான சான்று பெற்ற நெல் விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விற்பனை நிலையங்களில் ஆய்வு தரமற்ற விதைகளை விற்றால் நடவடிக்கை: துணை இயக்குனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.