×

பஞ்சாப் அரசில் தான் இந்த கூத்து… இல்லாத துறையை 21 மாதம்நிர்வகித்த ஆம்ஆத்மி அமைச்சர்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சண்டிகர்: பஞ்சாப் ஆம்ஆத்மி அரசில் இல்லாத துறைக்கு ஒரு அமைச்சர் 21 மாதம் நியமிக்கப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். 2023 மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின் போது குல்தீப்சிங் தலிவால் என்ற அமைச்சருக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை இலாகா வழங்கப்பட்டது. அவரிடம் இருந்த விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் இலாகா பறிக்கப்பட்டது.

அதே சமயம் வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரத் துறை அவரிடமே இருந்தது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் குர்மீத் சிங் குதியனுக்கு வழங்கப்பட்டது. இது எல்லாம் பிரச்னை இல்லை. பிரச்னை என்னவென்றால் நிர்வாக சீர்திருத்தத்துறை பஞ்சாப் அரசில் இல்லை. அந்த துறையை அமைச்சர் குல்தீப்சிங் தலிவால் கடந்த 21 மாதங்களாக நிர்வகித்து வந்ததாக குறிப்பிட்டு இருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பிப்.21 அன்று பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில் வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான குல்தீப் சிங் தலிவாலுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை ஒதுக்கப்பட்டது. எனினும், நிர்வாக சீர்திருத்தத் துறை எனும் துறை இப்போது இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. பஞ்சாப் அரசில் இல்லாத துறைக்கு 21 மாதங்களாக குல்தீப் சிங் தலிவால் அமைச்சராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த சர்ச்சை உருவாகி உள்ளது.

பாஜ மூத்த தலைவர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,’ ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை கேலிக்குரியதாக ஆக்கி உள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர், இல்லாத ஒரு துறையை 21 மாதங்களாக நடத்தியுள்ளார். ஒரு அமைச்சர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதல்வருக்குத் தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், லூதியானா எம்பியுமான அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங்கும்,’ என்ன ஒரு மாற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பஞ்சாப் அரசில் தான் இந்த கூத்து… இல்லாத துறையை 21 மாதம்நிர்வகித்த ஆம்ஆத்மி அமைச்சர்: எதிர்க்கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Punjab government… ,Aam Aadmi Minister ,Chandigarh ,Punjab Aam Aadmi government ,Aam Aadmi Party ,Punjab ,Bhagwant Mann ,Chief Minister ,Dinakaran ,
× RELATED 67 வழக்கில் தொடர்புடைய குற்றவாளி...