×

நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கிய சாதிய பாகுபாடு சீமானின் கருத்துக்கள் அனைத்தும் வெறும் மேடை பேச்சாகவே உள்ளது: கட்சியில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலர் ராயப்பன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நாம் தமிழர் கட்சியில் தற்போது சாதிய பாகுபாடு தலை தூக்கியுள்ளது என்றும், சீமானின் கருத்துக்கள் அனைத்தும் வெறும் மேடை பேச்சாகவே உள்ளது என்றும் கட்சியில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலர் ராயப்பன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.நாம் தமிழர் கட்சியில், மண்டல நிர்வாகிகள் விலகுவதும், முக்கியப் பொறுப்பாளர் நீக்கப்படுவதும், அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வதும் தற்போது தொடர்கதையாகி இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்வாதிகார அணுகுமுறையும் உட்கட்சி ஜனநாயகமின்மையும் தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கட்சி தலைமை தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் சீமான், பெரியார் குறித்து பேசுவது சரியாக இல்லை என்றும், கட்சியில் சாதி பாகுபாடு நிலவுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருவது தற்போது, நாம் தமிழர் கட்சியில் புயலை வீசி வருகிறது. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நிலையில் சீமான் மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கொத்துக் கொத்தாக விலகி வருகின்றனர்.

தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் சீமான் உறுதியாக இருப்பதாகக் கூறி விலகல் தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் குறித்து சீமான் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரங்கள் அக்கட்சியில் புயலை கிளப்ப அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர். அரசியல் தலைவர்களை கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் விமர்சிக்கும் சீமானின் பேச்சு கட்சியினரே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், அவரது சர்வாதிகார போக்கும் கட்சியினர் மத்தியில் தற்போது கடும் எதிர்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியில் புதிதாக சாதிய பாகுபாடு நிலவுவதாக வந்த குற்றச்சாட்டு அக்கட்சியினர் மத்தியில் சீமான் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ராயப்பனும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராயப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

15 ஆண்டுகளாக, நாம் தமிழர் கட்சி களப்பணிகளிலும், கட்சியின் மாவட்ட, தொகுதி போன்ற பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளேன். கட்சியின் சார்பாக நடந்த ஐபிஎல்க்கு எதிரான போராட்டத்தில், சிறைக்கும் சென்று இருக்கிறேன். கட்சியின் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் கொண்ட ஆர்வத்தால், எனது வாழ்வாதாரமாக, மாதம் ₹40 ஆயிரம் சம்பாதித்து கொண்டு இருந்த நான், என்னுடைய வேலையும் விட்டுவிட்டு முழுநேரத் தமிழ்த் தேசிய அரசியலில் பணியாற்றி வந்தேன்.

அதுமட்டுமின்றி, அலுவலகங்களில் பிற இயக்கத்தினர் தாக்குதல் நடத்தும் போதும், முன் நின்று எதிரிகளை, எதிர்கொண்டு இருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியை, இதுவரை சிறப்புற கட்டமைத்து வந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியில் சமூக நீதியற்ற நிலைப்பாட்டைக் காண்கிறேன். இதனால், மிகுந்த மன வருத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறேன். நீ சாதியைப் பார்த்துப் போடுகிற ஓட்டு, எனக்கு தீட்டு!, நீ தாழ்த்தப்பட்டவன் என்றால், உன்னை தாழ்த்தியவன் யார்? என்ற சீமானின் மேடைப் பேச்சையெல்லாம் கேட்டு, கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு, இந்த கட்சியில், களப் பணியாற்றி வந்தேன். ஆனால், அந்தப் பேச்சுக்கள் தற்போது, வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே மாறியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பில், பலமானச் சாதியப் பாகுபாடு உள்ளது. இதுவரைக் கட்சிக்கு வேலை செய்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தவர்களை, சாதியின் அடிப்படையில் விலக்கி, கட்சிக்காக எந்த ஒரு பணியும் செய்யாத தன் சமூகமே பெரிதென்று இருக்கிறவர்களைப் பொறுப்பில் அமர்த்துகிற நிலைப்பாடு, கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு தினம் துடித்துத் தவிக்கிறேன். இது போன்ற நடவடிக்கைகள் கட்சிக்கும், கட்சி கொள்கைகளுக்கும் எதிராக உள்ளதால், எப்படி உடலை விட்டு உயிர் பிரியுமோ?. அதே வலியுடன், கட்சியை விட்டுப் பிரிகிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கிய சாதிய பாகுபாடு சீமானின் கருத்துக்கள் அனைத்தும் வெறும் மேடை பேச்சாகவே உள்ளது: கட்சியில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலர் ராயப்பன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Kanchipuram East District ,Rayappan ,Chennai ,Raiappan Bharappu ,Rajappan Bharappu ,Seiman ,Kanchipuram East ,District ,Raiapan Bharappu ,
× RELATED சீமான் நல்லா வசனம் பேசுவார்; ரசிப்போம்: சொல்கிறார் வானதி சீனிவாசன்