×

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்: தனிப்பட்ட அதிகாரம் உண்டு என விளக்கம்

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 10ம் தேதி ஒத்தி வைத்திருந்தது.

குறிப்பாக வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக 12 கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘இந்திய அரசியல் சாசனத்தின்கீழ் ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் உண்டு. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200ல் குறிப்பிடப்பட்டுள்ள விருப்புரிமை என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை பிரதிபலிக்கிறது. அதனடிப்படையில் சட்டப்பேரவை நடவடிக்கையின்படி ஆளுநர் செயல்பட வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கி உள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த மசோதா செயலிழந்து விட்டது என்றுதான் அர்த்தம். அதற்கு என்று தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க தேவையில்லை. அதேபோன்று காலாவதியான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இருப்பினும் அதுபோன்ற மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். அதற்கான அரசியல் சாசன அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.

அதேபோன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலம் தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பு எங்களுக்கு பொருந்தாது. இருப்பினும் தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிரான இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம். அதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. இதேபோன்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு என்பது அவரது அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.

அதாவது அதிகாரம் அனைத்தையும் மாநில அரசே வைத்து கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது. அதனால் அந்த கோரிக்கை கொண்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை. முரண்பாடு உள்ளது என்று ஆளுநர் நினைத்த காரணத்தால்தான் அவர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. மேலும் ஆளுநருக்கு என்று வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தின் அடிப்படையின் மூலம் எந்த ஒரு நிலையிலும் முடிவு எடுப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய முடியும்.

மேலும் ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துவிட்டால் அரசியல் சாசன பிரிவு 200ன் செயல்பாடு என்பது முடிந்து விட்டது ஆகும். இதையடுத்து குறிப்பிட்ட அந்த மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 201 செயல்பாட்டுக்கு அது வந்துவிடும். இதில் குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை நிறுத்தி வைக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அது அரசியல் சாசன பிரிவு 254ன்படி மாநில சட்டம் என்பது ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராகவோ அல்லது முரணாகவோ இருக்கிறது என்று அர்த்தமாகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் உச்ச நீதிமன்ற்த்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்: தனிப்பட்ட அதிகாரம் உண்டு என விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,Mu. K. Stalin ,governor ,R. N. ,Ravi ,Governor R. N. ,Dinakaran ,
× RELATED கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக...