×

ஓசூர் பஸ் நிலையம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: பொதுமக்கள் கடும் அவதி


ஓசூர்: ஓசூர் பஸ் நிலையம் எதிரே, சர்வீஸ் சாலையில் மலர் சந்தைக்கு வருவபர்கள் டூவீலர்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஓசூர் பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் மற்றும் பஸ்கள் இயக்கத்தால் பரபரப்பாக இருக்கும். ஓசூர் பஸ் நிலையத்தின் எதிரே, கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக வட மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அதேபோல் பெங்களூரு மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி, ஜூஜூவாடி, சிப்காட் போன்ற பகுதிகளில் இருந்து, ஓசூர் நகர பகுதி மற்றும் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும், எதிரே உள்ள மலர் சந்தையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் வருகிறது.

ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து உதிரிப்பாகங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும், இந்த சர்வீஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, பாகலூர் சாலை வழியாக ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் சுமார் ₹50 லட்சம் மதிப்பில் சர்வீஸ் சாலையையொட்டி நடைபாதை அமைக்கப்பட்டது. நடைபாதையையொட்டி உள்ள மலர் சந்தைக்கு வருபவர்கள், வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள், நடைபாதையில் கார், டூவீலர்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதேபோல் தள்ளுவண்டிகள் நிறுத்துவதாலும், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு அதிகாரிகளை நியமித்தாலும், அவர்கள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. பஸ் நிலையம் எதிரே மலர் சந்தையையொட்டி நடைபாதை முழுவதும் வாகனங்கள் நிறுத்துவதால், பெண்கள், வயதானவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. குறுகலாக மாறிய பாதையில் ஒதுங்கி நடந்து செல்லும் போது, சிலர் தவறான நோக்கத்துடன் பெண்களை இடித்து விட்டு செல்கின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ₹50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை, டூவீலர்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. யார் நடவடிக்கை எடுப்பார்கள். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே கேள்வியாக உள்ளது,’ என்றனர்.

The post ஓசூர் பஸ் நிலையம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Hosur bus station ,Hosur ,Osur bus station ,Krishnagiri ,
× RELATED ஓசூர் உழவர் சந்தை முன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம்