அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் பூங்கா அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெருநகர கண்காணிப்பு பொறியாளர் நேற்று இதுதொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பார்க்கிங் பகுதியில் பூங்கா பணி நடைபெறாது என உறுதியளித்தார். கோயம்பேடு மார்க்கெட் வளாகம் 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பழங்கள், பூக்கள், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பூ மார்க்கெட் அருகில் பசுமை பூங்கா அமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது. பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்த பணியை சிஎம்டிஏ கோரியுள்ளது.இந்த பூங்காவில் அடர்வனம், பசுமை புல்வெளி, பருவ காலத்துக்கு ஏற்ற வகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைபயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுகிறது.
திறந்தவெளி பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ள நிலையில், பூங்கா பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கு வியாபாரிகளின் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென பூங்கா அமைக்க சுற்றுச்சுவர் எழுப்பியதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ‘‘பார்க்கிங் ஏரியாவில் சுவர் எப்படி கட்டலாம்’ என்று எதிர்ப்பு தெரிவித்து பலமுறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்கு சென்ற வியாபாரிகள், அங்கு அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளனர். அதில், ‘வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் வியாபாரிகளுக்கு தெரியாமல் எப்படி சுவர் எழுப்பலாம்’ என்று முறையிட்டனர். அதற்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள், ‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எந்த ஒரு வேலையும் நடக்காது என்றும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் பூங்கா அமைக்கப்படாது’ எனவும் உறுதி அளித்தனர்.
ஆனால், அதையும் மீறி மீண்டும் பார்க்கிங் பகுதியில் பூங்கா கட்டுமான பணி தொடங்கியதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற கூடாது எனவும், வியாபாரிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். இதனையடுத்து வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியை, சென்னை பெருநகர கண்காணிப்பு பொறியாளர் ராஜாமகேஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் தலைமையில் குவிந்த வியாபாரிகள், அதிகாரிகள் உத்தரவை மீறி பார்க்கிங் பகுதியில் பூங்கா எப்படி அமைக்கலாம், என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் கண்காணிப்பு பொறியாளர், வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உங்களுக்கு தேவையானதை செய்து தரும்படி உறுதி அளிக்கிறேன், என்றார்.
அதன் பின்னர் வியாபாரிகள் வரைபடத்தில் உள்ள இடத்தை காண்பித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கண்காணிப்பு பொறியாளர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, வியாபாரிகளுக்கு தேவையானதை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த ஆய்வின் போது கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உடன் இருந்தார்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் பூங்கா பணி நடைபெறாது: பெருநகர கண்காணிப்பு பொறியாளர் உறுதி appeared first on Dinakaran.