பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இடைவெளியை கல் வைத்து போக்குவரத்து போலீசார் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று வருகின்றன. மேலும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன.
இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் சாலையின் நடுவே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் குறிப்பிட்ட தொலைவிற்கு ஆட்கள் கடந்து செல்லும் அளவிற்கு சிறுசிறு இடைவெளிகள் உள்ளன. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையை நீண்ட தூரம் சுற்றி வந்து கடக்க சிரமப்படுபவர்கள் உயிரை பணயம் வைத்து சாலையின் தடுப்புச் சுவரின் சிறிய இடைவெளியில் புகுந்து சாலையை கடந்து வந்தனர். இதன் காரணமாக இந்த பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது.
இதனை தடுக்கும் வகையில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமௌலி தலைமையில் போக்குவரத்து போலீசார் மூன்று கிமீ தூரத்திற்கு சாலையின் தடுப்புச் சுவரில் உள்ள இடைவெளிகளின் வழியாக பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத வகையில் கல் வைத்து அதன் மீது சிமென்ட் வைத்து பூசும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் பெரும்பாலும் விபத்துகள் தடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.
The post பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தடுப்புச்சுவர் இடைவெளி அடைப்பு: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.