புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரிய மனுக்கள் உட்பட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்திருந்த பிரதான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், ‘‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொருத்தமட்டில் கேரள அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசு மெட்டல் படகை பயன்படுத்துவோம் என்று கூறியது, பராமரிப்புக்காக மரங்களை வெட்ட வேண்டும் என்று தெரிவிப்பது ஆகிய அனைத்தையும் எதிர்த்து செயல்படுகிறீர்கள். அதாவது பள்ளி குழந்தைகள் நடவடிக்கை போன்று கேரள அரசின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. மேலும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் பல திட்டவட்டமாக உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அப்படி இருக்கும் போது கேரளா தரப்புக்கு என்ன தான் வேண்டும் என்பது புரியவில்லை என்றனர்.இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, உமாபதி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ‘‘முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இறுதி முடிவு எட்டாத நிலை நீடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்ட கேரளா தரப்பு வழக்கறிஞர், ‘‘அணை பாதுகாப்பு தான் எங்களது முக்கிய கேள்வியாக உள்ளது. நீர்மட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றனர். ஆனால் கேரளாவின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரின் அளவு உள்ளிட்டவை ஏற்கனவே முடிந்து போன ஒன்றாகும். அதுகுறித்து இனிமேல் அதனையும் விசாரிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவின் படி ஒன்றிய அரசு கண்காணிப்பு மேற்பார்வை குழுவை அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு குழு தலைவர் அடுத்த ஒரு வாரத்தில் கேரள மற்றும் தமிழ்நாடு ஆகிய இருமாநில அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இதையடுத்து அதுகுறித்த விவரங்கள் கொண்ட அறிக்கையை அடுத்த நான்கு வாரத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை அடிப்படையாக கொண்டு நாங்கள் உத்தரவை பிறப்பிப்போம்.
அதேப்போன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே அணை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்படுகிறது. மேலும் மூன்று நீதிபதிகள் அமர்வு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பட்டியலிடுவார் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post முல்லைப் பெரியாறு அணை வழக்குகளை 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் முடிவு appeared first on Dinakaran.