
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே சீலையம்படி, கோட்டூர் இடையே சுமார் 141 ஏக்கரில் சிறுகுளம் கண்மாய் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் மூலம், சீலையம்பட்டி, கோட்டூர், பூலானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் இக்கண்மாய், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமலும், கரைகள், தடுப்புச் சுவர்கள், மதகுகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கண்மாய் பகுதியில் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.
இதனால் கண்மாயில் முழுமையாக நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதால் விவசாயமும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சீலையம்பட்டியைச் சேர்ந்த தேனி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மலைராஜா கூறுகையில், சீலையம்பட்டிக்கும் கோட்டூருக்கும் இடையே சிறுகுளம் கண்மாய், மெகா கண்மாயாக உருவாக்கப்பட்டு 8 மாதம் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பில் சிக்கியும், முட்புதர்கள் வளர்ந்தும் அடர்ந்த வனமாக மாறி கிடக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பால் நிலப்பரப்பு குறைந்து, பாசன நீர் தேக்க வழியின்றி கால் பங்கு தண்ணீர் மட்டுமே தேங்குகிறது.
பொதுமக்கள் விவசாயிகள் பயன் பெறும் விதமாக கண்மாயை தூர்வாரி, முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறுகுளம் கண்மாய்க்கு சிறப்பு பராமரிப்பு திட்டம் கேட்டு அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். அதற்கான உத்தரவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
The post சின்னமனூர் அருகே கருவேல மரங்களின் பிடியில் சிறுகுளம் கண்மாய்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
