கடவூர், பிப். 19: கடவூர் வட்டம் கொசூர் அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கருப்பன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டமானது சுக்காம்பட்டி பகுதியில் உள்ள குளம் அருகே அமைந்து உள்ளது. இதேபோல் கருப்பன் உள்பட பல்வேறு விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய தோட்டங்களும் அருககே அமைந்து உள்ளது. இதனால் தொண்டமாங்கிணம் ஊராட்சி கருங்கல்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள டிரான்ஸ்பார்மில் இருந்து சுக்காம்பட்டி கிராமத்திற்கு ஹெவி லைன் வாயிலாக மின்சாரம் செல்கிறது. இந்த மின்சாரமானது குடியிருப்புகளுக்கும் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சுக்காம்பட்டியில் உள்ள தெற்கு தெருவில் இருந்து வடக்கு திசையில் உள்ள சுக்காம்பட்டி குளத்துக் கரை வரை மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் சுக்காம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளை கடந்து உள்ளதாக கூறுகின்றனர்.இந்நிலையில் சுக்காம்பட்டி தெற்கு தெருவில் இருந்து வடக்கு திசையில் உள்ள சுக்காம்பட்டி குளத்துக் கரை வரை அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்கள் பழுதான நிலையில் உள்ளது.
இதேபோல் இந்த மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு உள்ள மின் கம்பிகள் தளர்வு ஏற்பட்டு மிகவும் தாழ்வாக செல்கிறது.மேலும் விவசாய நிலத்தில் செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் சுமார் 7 அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்வதால் தினந்தோறும் விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு டிராக்டர் மற்றும் எருது மாடுகளை கொண்டு உழவு பணிகள் செய்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளதாக கூறுகின்றனர்.
The post தொண்டமாங்கிணம் ஊராட்சியில் வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பங்கள் நடந்து செல்ல விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.