சங்கராபுரம், பிப். 19: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). அரசு பள்ளி ஆசிரியரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து 2 கிலோ வெள்ளி, ஒரு பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் அதே கிராமத்தில் நாராயணன் மனைவி செல்வி என்பவரது வீட்டில் 2 பவுன் நகை, 85 ஆயிரம் ரொக்கம், செல்வம் என்பவரின் வீட்டில் 2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களையும் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதவிர அப்பகுதியில் வசிக்கும் ராமன், சுப்பிரமணி, செல்வி ஆகியோர்களின் வீடுகளிலும் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். மேலும் தேவபாண்டலம் கிராமத்தில் அமுதா என்பவரது வீட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து இதுபோன்று கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 7 வீடுகளின் பூட்டை உடைத்து நடந்துள்ள கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சங்கராபுரம் அருகே மர்ம நபர்கள் துணிகரம் 3 வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு மேலும் 4 வீடுகளில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.
