×

தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும்: சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தி.நகர் வணிக கட்டிடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிஎம்டிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய வணிக கட்டிடத்துக்கு அனுமதி பெற்று விட்டு, அதைமீறி 10 தளங்கள் வரை கட்டிய தனியார் கட்டுமான நிறுவனம், அனுமதின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வரன்முறை கோரி அரசிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டிடத்துக்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

விதிமீறல் கட்டிட பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என்று உரிமையாக கோர முடியாது. வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. ஒருபுறம் கட்டிட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக்கப்படுகின்றன. அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

The post தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும்: சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : T. Nagar ,High Court ,CMDA ,Chennai ,CMD ,T. Nagar, Pondibazar ,Court ,Dinakaran ,
× RELATED கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண்