சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் சார்பில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.1,893 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் சென்னை அடைந்துள்ள வளர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சென்னை வரலாற்றை திமுக அரசின் பங்களிப்பை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. கலைஞர் ஆட்சிக் காலத்திலும், முதல்வர் சென்னை மாநகராட்சியின் மேயராக பணியாற்றியபோதும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு எப்படி இந்திய ஒன்றியத்தில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றதோ, அதேபோல இந்திய மாநகராட்சிகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சி ஒரு முன்மாதிரி மாநகராட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சிங்காரச் சென்னை 2.0, நமக்கு நாமே திட்டங்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை இந்த விழாவின் மூலம் செயல்படுத்தி இருக்கின்றோம். சென்னை மாநகராட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்களை அரசு செயல்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
* அண்ணனாக துணை நிற்பேன்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு முதல்வர் சென்றாலும், மாணவ, மாணவிகள் மிகுந்த அன்போடு நமது முதல்வரை “அப்பா…அப்பா” என்று உரிமையோடு அழைக்கின்றார்கள். அது பற்றிக் கூட அவர் நேற்று முன்தினம் கூறியிருக்கிறார். தந்தையாக இருந்து உங்களுக்கான திட்டங்களை முதல்வர் தொடர்ந்து செயல்படுத்துவார். உங்கள் வீட்டில் ஒரு அண்ணனாக நானும் உங்களுக்கு என்றும் துணை நிற்பேன்,’’ என்றார்.
The post சென்னை மாநகராட்சி நாட்டுக்கே முன்மாதிரி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.
