×

பட்டரைபெரும்புதூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுரங்க நிலவறை கண்டுபிடிப்பு: நெடுஞ்சாலை பணிக்காக இடிக்க வேண்டாமென கோரிக்கை

திருவள்ளூர்: பட்டரைபெரும்புதூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுரங்க நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக 9,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலை இடிக்க வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பட்டா நிலங்களையும் இழப்பீட்டுத் தொகை கொடுத்து சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பட்டரைபெரும்புதூரில் 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இல்லாத அளவுக்கு மிக உயரமான முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். பழமை வாய்ந்த இந்த கோயிலை சாலை பணிக்காக அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கோயிலுக்குள் சுரங்க நிலவறை இருப்பதாக முன்னோர்கள் சொன்னதாக தொல்லியல் துறைக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில் கருவறைக்குள் ஒன்றரை மீட்டர் அகலமும், 7 அடி ஆழமும் கொண்ட நிலவறை என்று சொல்லக்கூடிய சுரங்கம் போன்று ஒரு பகுதி இருப்பதை கண்டறிந்தார்.

மேலும் இந்த கோயில் 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்பது கல்வெட்டு மூலம் தெரிய வந்தது என்றும், கோயில் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் அல்லது நகைகள், சிலைகளை காப்பதற்காக இது முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதனையறிந்த கிராம மக்கள் இந்த சுரங்க நிலவறையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலவறை அரசு உத்தரவின் பேரில் அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்.

7 அடி ஆழமும், ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட இந்த நிலவறையை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சென்று பார்க்க முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சுரங்கமானது திருப்பாச்சூர், திருவாலங்காடு வரை நீடித்திருக்க வாய்ப்பிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலை அகற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பட்டரைபெரும்புதூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுரங்க நிலவறை கண்டுபிடிப்பு: நெடுஞ்சாலை பணிக்காக இடிக்க வேண்டாமென கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Subramania Swamy temple ,Pattaraiperumbudur ,Tiruvallur ,National Highway ,Chennai-Tirupathi National Highway… ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...