×

இசை அமைப்பாளர் ராஜ் மாரடைப்பால் மரணம்

ஐதராபாத்: தோட்டக்குரா சோமராஜூ, சலூர் கோட்டீஸ்வர ராவ் ஆகியோர், ‘ராஜ்-கோட்டி’ என்ற பெயரில் இணைந்து இசை அமைத்தனர். முன்னணி நடிகர்கள் நடித்த பல தெலுங்கு படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவரான ராஜ், நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணம் அடைந்தார். 68 வயது நிரம்பிய அவர், ஐதராபாத்தில் குகட்பல்லி வீட்டிலுள்ள குளியலறையில் தவறி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குளியலறையில் விழுந்த அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். மறைந்த ராஜூக்கு தீப்தி, திவ்யா, ஸ்வேதா ஆகிய மகள்கள் இருக்கின்றனர்.

திவ்யா சினிமாவில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். ராஜின் இறுதிச்சடங்கு இன்று ஐதராபாத்தில் மஹாபிரஸ்தானத்தில் நடைபெறுகிறது. 180க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய ராஜ்-கோட்டி ஆகிய இருவரும் 3,000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்திருக்கின்றனர். இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் 2,500க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். ராஜ்-கோட்டி ஆகியோரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் 8 ஆண்டுகள் கீபோர்டு புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார். 1994ல் ‘ஹலோ பிரதர்ஸ்’ படத்துக்காக ராஜ்-கோட்டிக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆந்திர மாநிலத்தின் நந்தி விருது கிடைத்தது.

ராஜ் மறைவு குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரபல இசை அமைப்பாளர்களான ராஜ்-கோட்டி ஜோடியில், ‘ராஜ்’ இல்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது. அதிக திறமை சாலியான ராஜ், என் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில், தொடர்ந்து எனது படங்களுக்கு ஜனரஞ்சகமான பாடல்களைக் கொடுத்து, எனது படங்களின் வெற்றியில் பெரும்பங்கு வகித்தார். அந்தப் பாடல்கள் என்னை ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக்கியது. ராஜின் அகால மறைவு இசையுலகிற்கு பேரிழப்பு. அவரது ரசிகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.

The post இசை அமைப்பாளர் ராஜ் மாரடைப்பால் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raj ,HYDERABAD ,Thotakura Somaraju ,Salur Koteswara Rao ,Raj-Koti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாஜகவினர் என்னை விலைக்கு வாங்கும்...