×

மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பி திருடியபோது காவலாளிகளை தாக்கிய 3 பேர் கைது

துரைப்பாக்கம்: சென்னை ராஜீவ்காந்தி சாலை, பெருங்குடி பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 16ம்தேதி ஆட்டோவில் வந்த 3 நபர்கள், மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றனர். அப்போது, பணியில் இருந்த மெட்ரோ பணி காவலாளிகள், இரும்பு திருட்டை தடுக்க முயன்றபோது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர், காவலாளிகளை கல்லால் அடித்து விரட்டினர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மெட்ரோ பணி காவலாளிகள், சாலையில் சென்றவர்களும் அவர்களது செல்போனில் காட்சிப்படுத்தினர். மெட்ரோ பணி காவலாளிகளை, இரும்பு திருட்டில் ஈடுபட்டவர்கள் கல்லால் அடித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்து, புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், மெட்ரோ இரும்பு கம்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை, போலீசார் நேற்று கைது செய்து நடத்திய விசாரணையில், துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் முத்து (40), சரத்குமார் (33), மணிகண்டன் (32) என்பதும், இவர்கள் 3 பேரும் மது குடிப்பதற்காக பணம் இல்லாததால், மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் போலீசார், கைதான 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பி திருடியபோது காவலாளிகளை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Perungudi ,Rajiv Gandhi Salai, Chennai ,Dinakaran ,
× RELATED ஐ.டி ஊழியரை மிரட்டி வழிப்பறி பிரபல...