×

தாளவாடி மலைப்பகுதியில் பசு மாட்டை அடித்துக் கொன்ற காட்டு யானை: கிராமமக்கள் அச்சம்

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த காட்டு யானை பசு மாட்டை அடித்துக் கொன்றது. பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் தூமன் (55). இவர் 10க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டி அமைந்துள்ள மாட்டுக் கொட்டகையில் பசு மாடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில், இன்று (19ம் தேதி) அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மல்லன்குழி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை அவரது மாட்டுக் கொட்டகை அருகே இருந்த கழிப்பறையை தும்பிக்கையால் இடித்து தள்ளியது. இதைத்தொடர்ந்து மாட்டுக் கொட்டகையில் புகுந்த காட்டுயானை ஒரு பசுமாட்டை தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானையை கண்ட மற்ற பசுமாடுகள் சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் வந்து பார்த்தபோது, காட்டு யானை மாட்டுக் கொட்டகையில் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சத்தம் போட்டு காட்டு யானையை விரட்டி அடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post தாளவாடி மலைப்பகுதியில் பசு மாட்டை அடித்துக் கொன்ற காட்டு யானை: கிராமமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thalawadi Hills ,Sathyamangalam ,Mallankuzhi village ,Thalavadi hills ,Talavadi hills ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...