×

அரவக்குறிச்சி- பள்ளபட்டி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

 

அரவக்குறிச்சி, பிப். 18: அரவக்குறிச்சியில் இருந்து பள்ளபட்டி செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.அரவக்குறிச்சியில் இருந்து பள்ளபட்டி செல்லும் சாலை 5 கிலோ மீட்டர் கொண்டதாகும். பள்ளபட்டியில் இருந்து கரூர் செல்லும் பிரதான சாலையான இதில் தினந்தோறும் ஐயாயிரத்திற்கும் மேல் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் சாலையின் ஒருபுறம் மண் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டும் வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியிலிருந்து ரங்கராஜ் நகர் வரை 3 கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது.

மின் விளக்குகள் இல்லாததால்காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பறிக்கப்பட்டுள்ள குழியில் மழைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் விஷச் சந்துக்கள் அதிக நடமாட்டம் உள்ள இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் விஷ ஜந்துக்கள் வாகன ஓட்டிகளை தீண்டும் நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அரவக்குறிச்சியில் இருந்து பள்ளபட்டி செல்லும் சாலையில் தேவைக்கேற்ப மின்விளக்குகள் அமைத்து தர வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி- பள்ளபட்டி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi-Pallapatti ,Aravakurichi ,Pallapatti ,Karur… ,Dinakaran ,
× RELATED மாவட்ட அளவில் சுற்றுச்சூழல்...