காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களின் குளங்கள் நீரின்றி வறண்டு கிடப்பதால், அதன் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் கோயில் குளங்கள், குட்டைகள், ஏரிகள் என மொத்தம் 44 நீர்நிலை ஆதாரங்கள் உள்ளன. இதில், அல்லாபாத், ஓரிக்கை என இரு ஏரிகள் அடக்கம். மேலும், மாநகராட்சி எல்லையில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்றவை நீர்நிலைகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த நீர்நிலைகளை சீரமைக்கவும், மழைநீரை நீர் வரத்து கால்வாய்களில் கொண்டு செல்ல சரியான நடவடிக்கை இதுவரை இல்லாததால், நீர்நிலைகள் மிக மோசமான நிலையிலேயே இன்றுவரை காணப்படுகின்றன.
குறிப்பாக, கோயில் அருகே உள்ள பெரும்பாலான குளங்களும் சரியான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை. இதனால், ஆண்டுதோறும் பருவமழை காலங்களில்போது பலத்த மழை பெய்தும், கோயில் குளங்கள் முழுமையாக நிரம்பாமல் காணப்படுகின்றன.அப்போது, நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக அமைக்கப்பட்ட இக்குளங்களுக்கு மழைநீர் வரும் கால்வாய்கள் சரியான பராமிப்பு இல்லை. இதனால், கால்வாய்கள் தூர்ந்து அடைப்புகள் ஏற்பட்டதாலும், மழைநீர் வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் ஆண்டுதோறும் வழிமாறி சென்று மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. அதனால், மழைக்காலங்களில் குடியிருப்புவாசிகளும் சொல்லோன துயரத்திற்கு ஆளாகின்றனர்.
உதாரணமாக, காஞ்சிபுரம் மங்களேஸ்வரர் கோயில் அருகே உள்ள மங்களதீர்த்த குளம், ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகம் பராமறிக்கின்றது. கடந்த 2018ல் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.11.85 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது.ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை முறையாக தூர்வாரி சீரமைக்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், மங்களதீர்த்த குளம் முழுமையாக நிரம்புவதில்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோல், குமரக்கோட்டம் சுப்பிரமணிசுவாமி கோயில் குளம் சீரமைக்கப்பட்டும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் முறையாக சீரமைப்பு இல்லாததால் இக்குளம் முழுமையாக நிரம்பி பல ஆண்டுகளை கடந்து விட்டது.காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், 2001ல், ரூ.23 லட்சத்திலும், 2018ல் மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில் ரூ.25.39 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி வாருவதில் கோட்டைவிட்டு விட்டனர். இதனால், குளம் நிரம்புவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம் மேட்டு தெருவில் நகரீஸ்வரர் கோயில் குளத்து நீரை 30 ஆண்டுகளுக்கு முன் குளத்து நீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தனர். காலப்போக்கில், குளம் பராமரிப்பின்றி சீரழிந்தது. பின்னர், 2002ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் குளம் புதுப்பிடிக்கப்பட்டது. குளத்துக்கு மழைநீர் வரவேண்டிய கால்வாய் கட்டமைப்பு இல்லை.அஷ்டபுஜ பெருமாள் கோயில் வளாகத்தில் கஜேந்திர புஜ்கரணி என அழைக்கப்படும் தெப்பகுளம் உள்ளது. கும்பாபிஷேகத்தின்போது, தூர்வாரி சீரமைக்கப்பட்ட இக்குளத்துக்கு தேவையான மழைநீர் வடிகால்வாய் இல்லை.
அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக லேசாக நிரம்பி காணப்படும். ஆனால், முழுமையாக எப்போதும் நிரம்பி காட்சியளித்தில்லை.
உலகளந்த பெருமாள் கோயில் குளம் சீரமைக்கப்பட்டு இருந்தாலும், குளத்திற்கு மழைநீர் வர, சரியான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி இன்று வரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இக்குளத்திலும் தண்ணீர் நிரம்புவது பல ஆண்டுகளாகவே கேள்வி குறியாகவே உள்ளது.இதனிடையே, காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது.
குளத்திற்கு மழைநீர் வரும் அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இக்குளத்தில் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரும் பாசி படர்ந்து சுகாதராமற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், கோயில்களின் பயன்பாட்டிற்கும், கோயிலை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குபவை கோயில் குளங்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே, கோயில் குளங்களை முறையாக தூர்வாரி குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை சரியான முறையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்டம் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post காஞ்சிபுரம் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில் குளங்களின் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுமா?பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.