×

ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று 65 வயதாகிறது. எனவே புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்றனர். தேர்வு குழுவில் இடம் பெற்ற பெயர்களை 5 பேரும் பரிசீலனை செய்து, அதில் ஒருவரை தேர்வு செய்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்தனர்.

இதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யபட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பீகார் சட்டப்பேரவை தேர்தலையும், அடுத்த ஆண்டு மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு தேர்தல்களையும் ஞானேஷ்குமார் மேற்பார்வையிடுவார். 1988ம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார், பதவி விலகும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான மூவர் குழுவில் உள்ள இரண்டு தேர்தல் கமிஷனர்களில் மூத்தவர். இன்னொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து.

அவர் உத்தரகாண்ட் கேடரைச் சேர்ந்த அதிகாரி ஆவார். 61 வயதான ஞானேஷ் குமார் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றினார். 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் 370 வது பிரிவை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்க உதவினார். அப்போது அவர் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக (காஷ்மீர் பிரிவு) இருந்தார்.

ஒரு வருடம் கழித்து, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக, இருந்த ஞானேஷ் குமார் உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான ஆவணங்களையும் கையாண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். அமித்ஷா வசம் உள்ள கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிவில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளராகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், பாதுகாப்புத் துறை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங்கில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார், மேலும் இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதியையும் படித்துள்ளார்.

* 48 மணி நேரம் பொறுக்க முடியாதா? ராகுல் எதிர்ப்பு
புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வுக்குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. இது வெறும் 48 மணிநேரம் தான். புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வை அதுவரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Kumar ,Gyanesh Kumar ,Chief Election Commissioner ,Union Law Ministry ,New Delhi ,Prime Minister's ,House ,Delhi ,Modi ,Commissioner ,Dinakaran ,
× RELATED போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும்...