×

கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மார்க்கத்தில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க கையெழுத்து இயக்கம்

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி-சென்னை மார்கத்தில் பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர், விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. வடசென்னையை ஒட்டியுள்ள இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை, நெல்லூர் வரை உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், காட்டுப்பள்ளி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மின்சார ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இம்மார்க்கத்தில் மட்டும் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்ல 1.15 மணி நேரமாகும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல சுமார் 3 மணி நேரம் ஆவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் நிலைய அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ரயில்களை இயக்காமல், 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், கால விரயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது போல், குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று முதல் பொன்னேரி ரயில் நிலையம் உட்பட 8 ரயில் நிலையங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 1 லட்சம் பயணிகளிடம் கையெழுத்து பெற்று, ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சரக்கு ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி வரையில் தற்போதுள்ள 2 வழித்தடத்தை முழுமையாக 4 வழித்தடமாக மாற்றி புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மார்க்கத்தில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Signature movement ,Gummidipoondi – Central ,Ponneri ,Gummidipoondi-Chennai ,Meenjur ,Athipattu ,Athipattu Pudunagar ,Ennore ,Wimco Nagar ,Thiruvottriyur ,North Chennai ,Sulurpettai ,Nellore ,Andhra Pradesh ,Thiruvallur… ,Signature movement to run trains on ,Gummidipoondi – Central route ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...