×

சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமரின் மக்கள் மருந்தகம் உட்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், “முதல்வர் மருந்தகம்” திறப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு திறக்க தயாராக உள்ளது. மீதமுள்ள மருந்தகங்களிலும் பணிகள் விரைவில் முடியும். முதல்வரின் நேரடி பார்வையில் இந்த மருந்தகங்கள் செயல்பட உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் 500, தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்கள் என 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. மதுரையில் 52, கடலூர் 49, கோவை 42, தஞ்சை 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைய உள்ளது. சென்னையில் 33 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோர்க்கு ரூ.3 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது. வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பிரதமர் மருந்தகம் உட்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத விதமாக மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும். விரைவில் காலியாக உள்ள ரேசன் கடை பணியாளர் இடங்கள் நிரப்பப்படும். கூட்டுறவுத்துறை பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசு எங்கள் கோரிக்கைக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஏற்கவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்தியபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், கூடுதல் பதிவாளர் (நுகர்வு பணிகள்) அம்ரித் உட்பட இணைப்பதிவாளர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,MK Stalin ,Minister ,Periyakaruppan ,Tamil Nadu ,Prime ,Minister's People's Dispensary… ,
× RELATED கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப்...