கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஏறத்தாழ இந்த குணங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவர்கள் சுயம்பு. தான்தோன்றி. யார் தயவும் இன்றி தம் இஷ்டப்படி வளர்ந்து ஆளாகி உச்சத்தை அடைவர். எல்லோருக்கும் ஆதரவு காட்டுவர். மகரம், கும்பம் இரண்டும் சனி ஆட்சி செய்யும் ராசி என்றாலும்கூட, மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். கும்பத்தில் அவ்வாறு இல்லை. மகர ராசியில் பிறந்த குழந்தை, பெரியவர்களைப் போல நடை, உடை, பாவனை மற்றும் சிந்தனைகளைக் கொண்டிருக்கும். ஆனால், கும்ப ராசியில் பிறந்த குழந்தை, அதே குழந்தை மனோபாவத்துடன்தான் இருக்கும்.
அன்பும் நட்பும்
கும்பராசிக் குழந்தைகள், வித்தியாசமான தனித் தன்மையான பழக்க வழக்கங்கள் கொண்ட குழந்தைகளாக இருக்கும். கதைகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்லி யாரோடும் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். கும்பராசி குழந்தைகள் அன்பும் நட்பும் கொண்டவர்கள்.
அறிவுக்கூர்மை
கும்பராசி சிறுவர்கள், அறிவுக் கூர்மை உடைய குழந்தைகள் ஆவர். புதன் ராசி குழந்தைகளைக் காட்டிலும், கும்பராசிக் குழந்தைக்கு அறிவுக் கூர்மையும், மதிநுட்பமும் அதிகம். என்ன செய்தாவது எதைச் செய்தாவது, தான் நினைத்ததைச் சாதித்துவிடும். இந்த அறிவும், செயல் திறமும் குழந்தைப் பருவத்தில் இருந்தே கும்பராசிக்கு உண்டு. குழந்தைகளை சேட்டைக்காரன், சொல் பேச்சு கேட்காதவன் என்று குற்றம் சுமத்தக் கூடாது.
சுய நலம், சுய பலம்
கும்பராசி குழந்தைகள், தங்களுக்கான முடிவுகளை தானே எடுக்கும் அறிவு படைத்தவர்கள். சுய சிந்தனை, சுய நலம் இவர்களுக்கு அதிகம். அவர்களின் முடிவுகளை இலக்குகளைக் கண்டடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால் மட்டும் போதும். பெற்றோர்களின் வழிகாட்டுதல் கும்பராசிக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. இவர்கள் தன்னிச்சையாகக் காட்டுச் செடி போல் வளரக்கூடியவர்கள். யாருடைய தயவும் வழிகாட்டுதலும் யாருடைய கையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டிய அவசியமும் இல்லாதவர்கள்.
எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு
கும்பராசி குழந்தைகள், இயற்கையிலேயே புதிது புதிதாக சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். இக்குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் வல்லமை வந்துவிடும். ஏதேனும் ஒரு பிரச்னைக்கு பெற்றோர் குழம்பிக்கொண்டிருந்தால், இந்தக் குழந்தைகள் நொடியில் அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை வழங்கிவிடுவர்.
ஆழ்கடல் அறிவு
அமைதியாக யாரிடமும் வம்புச் சண்டைக்கு போகாமல், வாய்ச் சண்டை போடாமல் சாதுவாக இருப்பார்கள். ஆழ்கடல் போல் அமைதியாக இருக்கும் இக்குழந்தைகள், தங்களுக்குள் அறிவுப் பொக்கிஷமாக இருப்பார்கள். நிறைய வாசிப்பார்கள். நினைவாற்றல் அதிகம். பகுப்பாய்வுத்திறன் உண்டு. Analytic and calculative எனலாம். கணக்குப் பார்த்து பழகுவார்கள். கணக்கில் புலி.
விரும்பியது மட்டுமே வேணும்
கும்பராசியினர் கல்லூரியில் சேரும்போது இவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து படிக்கவிடுங்கள். பெற்றோர்களின் கனவுகளை கும்பராசி குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அப்படி திணித்தால் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு படித்துவிட்டு, பின்பு வெளியே வந்துவிடுவார்கள். மீண்டும் முதலிலிருந்து தாங்கள் ஆசைப்பட்ட கோர்சில் சேர்ந்து படித்து, தான் விரும்பிய வேலையில் சேர்வார்கள்.
அறிவுசார் விளையாட்டு
கும்பராசி குழந்தைகளுடைய கற்பனைத் திறனுக்கும் கல்வி அறிவுக்கும் ஏற்ற வகையில் நிறைய விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொடுங்கள். விடுகதை, puzzles, புதிர்க் கணக்குகள், cube, sudoku, போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுப் பொருட்கள், நூல்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுங்கள். வெளி விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருக்காது. கேரம்போர்ட், செஸ் போன்றவை சிறப்பாக விளையாடுவர். இத்தகைய அறிவு சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள பிள்ளைகளைத் தான் தோழர்களாக அவர்கள் தெரிவு செய்வார்கள்.
நண்பர்களின் எல்லை
கும்பராசிக் குழந்தைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கக்கூடும். எல்லா நண்பர்களுக்கும் அவர்கள் முழு மனதோடு நல்ல விதமாக இயன்றவரை உதவி செய்வார்கள். ஆனால் யாரும் இவர்களுடைய முடிவுகளில் தலையிடவோ ஆலோசனை வழங்குவோ கூடாது. அதை இவர்கள் விரும்புவதில்லை. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பழகும் கும்பராசி குழந்தைகள், எல்லோரிடமும் சமமான அன்பு காட்டுவார்கள். கும்பராசி குழந்தைகளை நண்பர்களாக பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள். சிறு வயதிலேயே அலட்டிக் கொள்ளாமல் அனைத்து உதவிகளையும் தங்கள் நண்பர்களுக்கு செய்யக் கூடியவர்கள்.
தனிமை என்றால் பயம்
கும்பராசி குழந்தைகள் தனிமையில் இருக்க அச்சம் கொள்வர். சனியின் குணம் பயம் என்பதாலும், அடிமைத்தனம் என்பதாலும், இவர்கள் தனித்திருக்க அஞ்சுவர். எப்போதும் பெற்றோர்களோடு, சகோதரர் உறவினர் மற்றும் நண்பர்களோடு இணைந்து இருப்பதையே விரும்புவர். ஒருவரோடு சண்டை போட்டாலும் அடுத்தவரோடு சேர்ந்து கொள்வார்கள். இவர்கள் தனிமை விரும்பிகள் அல்ல. வீட்டிலும் வெளியிலும் என் குழந்தைகளுக்கு ஏதேனும் கசப்பான அனுபவம் ஏற்பட்டால் மிகவும் மனம் வருந்தி அன்பான தன் தோழர் தோழியரிடம் சொல்லி ஆறுதல் அடைவர்.
வெளியே காட்டாத வெறுப்பு
பொதுவாக கும்பராசி குழந்தையை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் “டார்லிங் ஆப் த மாஸ்’’ என்று சொல்லலாம். மிகுந்த பொறுமைசாலிகள் என்பதால் இவர்கள் மனதிற்குள் இருக்கும் கோபம், அதிருப்தி, வெறுப்பு போன்றவற்றை வெளியில் காட்டுவதில்லை. இவர்களின் வெறுப்புகளை தணிக்க இயலாது.
எது பிடிக்கும் – பிடிக்காது
கும்பராசி குழந்தைகளுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் என் பிள்ளைக்கு உப்புமா பிடிக்கும் என்று அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் கும்பராசி குழந்தைக்கு உப்புமா பிடிக்காமல் இருக்கும். ஒரு நாள் ஏதோ ஒரு சிரமமான நேரத்தில் அந்த உப்புமாவை நல்லா இருக்கு என்று சொல்லி சாப்பிட்டு இருக்கும். அதை வைத்துக்கொண்டு அந்த
குழந்தைக்கு உப்புமாதான் பிடிக்கும் என்று தாய்மார் முடிவு கட்டி விடக்கூடாது. மொத்தத்தில் கும்பராசி குழந்தையின் பெற்றோர் பாக்கியம் செய்தவர்கள். இவர்கள் தாமாகவே வளர்ந்து பெரிய ஆளாகி உறவுகளையும் நட்புக்களையும் கவனித்துகொள்வார்கள்.
The post கும்பராசி குழந்தையின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் appeared first on Dinakaran.