×

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்: மாநில அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட அறிவுரை

சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கலைஞரால் 2007ம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சி குழு தலைவரான தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் கடந்த 12ம் தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக நேற்று காலை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு வருகை புரிந்து, அங்குள்ள நூலகத்தை பார்வையிட்டார். நூலகத்தில் உள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாக பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிறுவன இயக்குநர் காட்சி வழி மூலம் நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார். அதில் இந்நிறுவனத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் முதலமைச்சர் இந்நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டு கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு ஆகிய எட்டு புதிய நூல்களை முதல்வர் வெளியிட, அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.தமிழாராய்ச்சி மற்றும் பதிப்புகள் தவிர இந்த கழகத்தின் பணிகளில் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களை அடையும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செம்மொழியின் பெருமைகளை வெகுமக்கள் அறியச் செய்ய தக்க ஊடக வழிகள் மற்றும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இம்மையத்தின் பணிகளை அறியச் செய்ய பள்ளி கல்வி துறை மற்றும் உயர்கல்வி துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தமிழ் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் விர்சுவல் அகாடமி போன்ற மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். மேலும், 2010 முதல் 2019 வரை கலைஞர் செம்மொழி தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு 22.01.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த நிகழ்வின்போது, எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குநர் ஜெயசீலன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.* 4 மாடி கட்டிடம்இந்த கட்டிடம் தரைத்தளத்துடன் மொத்தம் நான்கு தளங்களை கொண்டுள்ளது. தரை தளத்தில் 45,000க்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களை கொண்ட நூலகமும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம் என இரண்டு கருத்தரங்க அறைகளும் உள்ளன. முதல் தளத்தில் கல்விசார் பணியாளர்களுக்கான அறைகள், அலுவலகம், இயக்குநர், பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் ஆகியோருக்கான அறைகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் மின்நூலகம், காட்சி வழி கற்பித்தல் அரங்கு, வலையொளி அரங்கு முதலானவையும் உள்ளன. மூன்றாம் தளத்தில் வருகைதரு பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது….

The post சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்: மாநில அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tamil Tamil Central Institute ,Chennai ,Chief of Tamil Nadu ,G.K. Stalin ,Tamil Nadu Central Institute of Majority Tamil Tamil Nadu ,Central Institute of Languages Translation ,Principal ,B.C. ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!