×

தமிழகத்துக்கான நிதியை பெற சட்டரீதியாக அணுக முடிவு? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இழுத்தடிக்கும் செயலுக்கு தீர்வு காண சட்ட ரீதியாக அணுகுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டு தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பம் இட்டால்தான் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு அவர் அளித்த பேட்டி: ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்பது இதற்கு முன்பு சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) என்ற பெயரிலும், ஆர்எம்எஸ்ஏ என்றும் இரு பிரிவாக செயல்படுத்தப்பட்டு வந்தன. அவற்றை ஒன்றாக இணைத்து சமக்ர சிக்‌ஷா என்ற பெயரில் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

2018ம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட திட்டக் குழுவின் மூலமாக ஆலோசித்து ரூ.4 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு ஒதுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இறுதியாக ரூ.3800 கோடி விடுவிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் 2024-25ம் ஆண்டுக்கு ரூ.2151 கோடியாகும். சமக்ர சிக்‌ஷா திட்டத்துக்கு நிதி வேண்டும் என்றால் ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க வேண்டும் என்று கூறினார்கள்.

பிறகு, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் என்ன? தமிழகம் ஏன் பிடிவாதமாக இருக்கிறது? என்றார்கள். தமிழகம் கல்வியில் முன்மாதிரியாக இருக்கிறது என்று தமிழகத்தை புகழ்ந்து பேசிவிட்டு, இறுதியாக பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் வற்புறுத்துவது பிளாக்மெயில் செய்வதுபோல உள்ளது.

இந்த நிதி வராததால் தமிழகத்தில் 40 லட்சம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுவர். இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக சட்ட ரீதியாக இதை அணுகலாமா என்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post தமிழகத்துக்கான நிதியை பெற சட்டரீதியாக அணுக முடிவு? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,Chennai ,Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Union Government ,Dinakaran ,
× RELATED பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி...