சென்ற இதழின் தொடர்ச்சி…
அஸ்வாரூடா அதிஷ்டித அச்வ கோடி கோடிபி ஆவ்ருதா
இப்போது நாம் பார்த்துக் கொண்டே வரும் நாமங்கள் தொடர்ச்சியாக பண்டாசுர யுத்தம் தொடங்கி நடந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எப்படி அம்பிகை சக்தி சேனைகளோடு வருகிறாள் என்றும், அதற்கு அடுத்ததாக அந்த சேனைகளுக்குள் இருக்கக் கூடிய அங்கங்களான கஜ சைன்யம் என்கிற யானைப் படை, அஸ்வ சைன்யம் என்கிற குதிரைப்படை. ரத சைன்யம், பாத சைன்யம் என்றெல்லாம் பார்த்தோம். அந்த சதுர் அங்கத்தில் கஜ சைன்யம் என்பதற்கு தலைவியாக இருக்கக்கூடியவளாக சம்பத்கரியைப் பார்த்தோம்.
இப்போது இந்த நாமத்தில் சதுர் அங்கத்தில் கஜ சைன்யத்திற்கு அடுத்தபடியாக இருக்கக் கூடியது அஸ்வ சைன்யம் என்கிற குதிரைப்படை. அப்போது குதிரைப்படை முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றது. அந்த குதிரைப்படை யாருடையது. அது எப்படி இருக்கிறது? அதனுடைய தலைவி யார்? அந்த குதிரைப்படை என்ன உணர்த்துகிறது? அதுதான் இந்த நாமத்தினுடைய விஷயம்.
எப்படி இதற்கு முந்தைய நாமத்தில் ஸிந்துர வ்ரஜ ஸேவிதா.. என்று இதற்கு முன்னால், யானைக்கூட்டங்களால் சேவிக்கப்பட்ட சம்பத்கரீ என்று பார்த்தோம். இப்போ இந்த நாமத்தில் அஸ்வ கோடி கோடி ஆவ்ருதா… அதாவது ஒரு குதிரை இரண்டு குதிரை இல்லை. கோடி கோடி குதிரைகள். கோடி கோடி குதிரைகள் சைன்யத்தில் சுற்றி நிற்கிறது. அதில் நடுநாயகமாக ஒரு குதிரை இருக்கிறது. தலைமை இடத்தில் ஒரு குதிரை இருக்கிறது. அந்தக் குதிரை மேல் அம்பிகை அமர்ந்திருக்கிறாள். அந்தக் குதிரை மேல் உட்கார்ந்திருக்கும் அம்பிகை அஸ்வாரூடா… அஸ்வத்தை அதாவது குதிரையை யார் ஆரூடம் பண்ணியிருக்கிறாளோ… அவளே அஸ்வாரூடா. அந்த அஸ்வாரூடாவானவள் குதிரைப் படைக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கிறாள். அவள் ஒரு பெரிய குதிரையில் அமர்ந்திருக்கிறாள். அதைச் சுற்றி கோடி கோடி குதிரைகள் நிற்கின்றது. அவள் அமர்ந்திருக்கக் கூடிய அந்தக் குதிரைக்கு அபராஜிதா என்று பெயர். இந்தப் பெயருக்கான அர்த்தம் யாராலும் வெல்லப்பட முடியாதது என்பதாகும். இந்த அம்பிகையை, குதிரைப் படைத் தலைவியை அஸ்வாரூடாவாக ஸ்துதி செய்வதுதான் இந்த நாமாவாகும்.
இப்போது அஸ்வாரூடா அதிஷ்டித அச்வ கோடி கோடிபி ஆவ்ருதா… அஸ்வாரூடாவால் வழிநடத்தப்படக் கூடிய கோடிகோடி குதிரைகளால் சேவிக்கப் படக் கூடியவள். யாரெனில்… மஹாராணியாக இருக்கக்கூடிய லலிதா மஹாதிரிபுரசுந்தரி.
இதுவே இந்த நாமாவினுடைய வெளிப்படையான அர்த்தம். இதற்கு நாம் உள்ளார்ந்த அர்த்தத்தையும், அந்தர்முகமான சில விளக்கங்களையும் பார்ப்போமா?
இதற்கு முந்தைய நாமாவில் கஜ சைன்யத்தை பார்க்கும்போது சம்பத்கரீ ஸமாரூடா ஸிந்துர வ்ரஜ சேவிதா என்கிற நாமத்தைப் பார்க்கும்போது இந்த இந்திரியங்களுக்கு பலத்தை உண்டு பண்ணுபவள் சம்பத்கரீ. அதுதான் சம்பத். அந்த இந்திரியங்களுக்கான விஷயங்களான, சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தாதி விஷயங்கள் இருக்கிறதல்லவா… இந்த விஷயங்கள்தான் யானைக் கூட்டங்கள் என்று பார்த்தோம். இப்போது குதிரைக் கூட்டம் எதைக் குறிக்கிறது.
இப்போது நாம் ஒரு விஷயத்தை பார்க்கலாம். இதற்கு முன்னால் உள்ள நாமாவின் மூலமாக பண்டாசூரன் எதற்கு வருகிறான் என்று பார்த்தோம். பண்டாசூரன் இந்திரியங்களுக்கான பலத்தை அபகரிக்க வருகிறான் என்று பார்த்தோம். சம்பதகரீ என்ன செய்கிறாள் எனில், அந்த இந்திரியங்களுக்குண்டான பெரும் பலத்தை மீண்டும் பொருத்துகிறாள். அப்படி இந்திரியங்கள் பலத்தை மீண்டும் பொருத்துவதற்கு அவள் உபயோகிக்கக் கூடியது என்னவெனில், இந்த இந்திரியங்களுக்கு விஷயங்களைக் காண்பிக்கிறாள். அந்த விஷயங்கள்தான் யானைகளாக இருக்கிறது என்று பார்த்தோம். இப்போது, இந்த இந்திரியங்களுக்கான அந்த விஷயங்களை பற்றக்கூடிய, அந்த விஷயங்களை நோக்கி போகக் கூடியதற்கு ஒரு விசை வேண்டுமல்லவா… அந்த வேகத்தை… அந்த இந்திரியங்களுக்கான வேகத்தை யார் உண்டு பண்ணுவார்கள் எனில் அஸ்வாரூடாவே செய்கிறாள்.
சரி, ஏன் இந்த வேகத்தை உண்டு பண்ண வேண்டும்? இந்த இந்திரியங்களுக்கு வேகத்தை உண்டு பண்ணினால், இந்திரியங்கள் வெளி உலகை நோக்கி… எல்லோரையும்போல ஓடத்தானே செய்யும். அப்படி வெளி நோக்கி ஓடக்கூடிய இந்திரியங்களைத்தானே நாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றுதானே நாம் பொதுவாகச் சொல்கிறோம். அப்படி இருக்கும்போது இந்திரியங்களுக்கு ஏன் வேகத்தை உண்டு பண்ண வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் தோன்றுகிறதல்லவா?
இப்போது இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. இதை நாம் சென்ற நாமாவிலும் பார்த்தோம். இந்திரியங்களுக்கு பலமும் வேகமும் இருந்தால்தான்… அந்த இந்திரியத்தை நாம் உள்நோக்கி திருப்ப முடியும். அந்த இந்திரியத்திற்கு பலமும் வேகமும் இல்லையெனில், அந்த இந்திரியமானது வெளிநோக்கியும் போகாது. உள்நோக்கியும் போகாது.
இப்போது சம்பதகரியும் அஸ்வாரூடாவும் என்ன செய்கிறார்களெனில், விஷயங்களுக்கான பலத்தையும் வேகத்தையும் கொடுக்கும்போது அந்த இந்திரியங்கள் ஓடத் தொடங்குகிறது. சரி. அது இங்கு வெளிநோக்கியே ஓட ஆரம்பிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வெளி நோக்கி ஓடினால் என்ன ஆகுமெனில், இந்த லௌகீகமான… லோகாயாதமான சிருஷ்டி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். இந்த சிருஷ்டியில் நாம் என்னென்ன பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அவை யாவும் நடந்து கொண்டே இருக்கும். இங்கு வேறொரு விஷயத்தையும் பார்ப்போம்.
வெளி நோக்கிப் போவதற்கான பிரபஞ்ச சிருஷ்டியை நடத்திக் கொண்டு, அதே இந்திரியங்களை உள்நோக்கித் திருப்பி, அப்படி உள்முகமாகப் போவதற்கான பலத்தையும், வேகத்தையும் கொடுத்து அந்த இந்திரியங்களை அந்தர்முகமாக்கி அத்யாத்மத்தையும் சிறக்கச் செய்பவர்களே சம்ப்தகரீயும், அஸ்வாரூடாவுமே ஆவார்கள். அம்பிகை எதற்கு இந்த யானைப் படை, குதிரைப்படை எதற்கு வைத்திருக்கிறாளெனில், பண்டாசூரனை சம்ஹாரம் செய்ய வேண்டும். அப்படி சம்ஹாரம் செய்வதன் மூலமாக இந்த பிரபஞ்ச சிருஷ்டி வெளிமுகமாக நடக்கக் கூடியது நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், அதே பிரபஞ்ச சிருஷ்டியில் இன்னும் சொல்லப் போனால், நாம் இப்போது வாழும் லௌகீக வாழ்க்கையில் வாழ்கிறோமே இதில் உள்ள சாதகர்களை அந்தர்முகமாக அத்யாத்மமாக அவர்களுடைய இந்திரியங்களை உள்முகமாக திருப்புவதற்கும் சம்பத்கரீயினுடைய அனுக்கிரகமும், அஸ்வாரூடாவின் அனுக்கிரகமும் வேண்டும். ஏனெனில், இந்திரியங்களுக்கு இந்தப் பலமும் வேகமும் இருந்தால்தான் உள்முகமாக திரும்ப முடியும்.
(சுழலும்)
The post மனக்குதிரையை அடக்கும் நாமம் appeared first on Dinakaran.