சென்னை: பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18ம் தேதி சென்னையில் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் ஹிந்து முன்னணி அமைப்பு மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசியல் சட்டம் தந்த கருத்து சுதந்திரத்தை போராட்டகாரர்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18 ம் தேதி வேல் பேரணி நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “ஏற்கனவே திருப்பரங்குன்றம் மழையின் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிபாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்காக கோரியுள்ள பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது” என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரை திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்று கேட்டதோடு தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனு தாரருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது என்றும் வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு மனுதாரர் வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் “ஏற்கனவே மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனையை மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளனர். அதற்காக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடி இல்லாத பாதையில் பேரணி நடத்த மனுதாரர் முன் வந்தாலும் பேரணி நடத்த அனுமதிக்ககூடாது” என தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தார்.
மேலும் “இதுபோன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும். தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் என்றும் பெயர்பெற்றது. மக்கள் மத வேறுபாடின்றி ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது . எல்லோருடைய மத நம்பிக்கைகளயும், வழிபாட்டு உரிமைகளையும் எவரின் இடையூறுமின்றி பாதுகாக்கும்” என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.