×

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை : ஐகோர்ட் தாக்கு

மதுரை: கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை என்று ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர்.இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை விதியின் படி கோயிலுக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும்.

1989 முதல் 2011ஆம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டு உள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 13 வருடங்களில் வாடகை பாக்கியாக 54 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கோயிலுக்குச் செலுத்த வேண்டியது உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது.ஆனால் இதுவரை கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே முறையாக வாடகை செலுத்தத் தவறிய திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கோயிலுக்குச் சேர வேண்டிய வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அலுவலர்களே வாடகை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன்?. பக்தர் வழக்கு தொடர்ந்த பிறகே வாடகை பாக்கி செலுத்தப்பட்டுள்ளது, தாமதத்திற்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது?, “இவ்வாறு கேள்வி எழுப்பினர். இதனிடையே வாடகை பாக்கி அரசிடமிருந்து பெற்று கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

The post கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை : ஐகோர்ட் தாக்கு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Aycourt Madurai branch ,Madurai Branches ,Thiruthondar Council ,Radhakrishnan High Court ,Thoothukudi ,District ,Dinakaran ,
× RELATED கருத்தடை செய்த பிறகும் பெண்ணுக்கு...