×

ஹார்வர்டு பல்கலைக்கழக மாநாட்டில் உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து உரையாற்ற உள்ளார் தொழிலதிபர் நீதா அம்பானி

டெல்லி: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள மாநாட்டில், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து தொழிலதிபர் நீதா அம்பானி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், இந்திய வணிகம், கொள்கை மற்றும் கலாச்சாரம் குறித்த வருடாந்திர இந்திய மாநாடு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி கலந்துகொண்டு, உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து முக்கிய உரையாற்றுகிறார். பிரபல கல்வியாளரும் ஹார்வர்டு வணிக பள்ளியின் முன்னாள் டீனுமான நிதின் நோரியாவுடன் கலந்துரையாடுகிறார்.

கலந்துரையாடலில், இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் நவீன உலகில் இந்தியாவை நிலைநிறுத்துவதில் அவை எவ்வாறு வலுவான பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ‘இந்தியாவில் இருந்து உலகம் வரை’ என்பதாகும். அதாவது, உலகளாவிய நோக்கங்களுக்கு பங்களிக்கும் இந்தியாவின் பயணத்தை கொண்டாடுவதையும், இந்திய கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் குரல்கள் எவ்வாறு உலகளவில் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதைகளை வடிவமைக்கின்றன என்பதை ஆராய்வதே இந்த கருப்பொருளின் நோக்கமாகும்.

நீதா அம்பானியின் கலந்துரையாடல், மாநாட்டின் கருப்பொருளுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும். உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளான தொழில்நுட்பம், காலநிலை நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம், ராஜதந்திரம், கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் பார்வை குறித்து விவாதிப்பதற்காக, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை ஆராய்ந்து, பெரிய உலகளாவிய சக்தியாக நாட்டின் எழுச்சியை முன்னிலைப்படுத்துவதற்காக ஹார்வர்டு மாணவர்களால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

The post ஹார்வர்டு பல்கலைக்கழக மாநாட்டில் உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து உரையாற்ற உள்ளார் தொழிலதிபர் நீதா அம்பானி appeared first on Dinakaran.

Tags : Businessman ,Neeta Ambani ,India ,Harvard University Conference ,Delhi ,Harvard ,University ,Harvard University ,United States ,Indian Conference on Indian Business, Policy and Culture ,
× RELATED கால் எலும்பு முறிந்த மனைவிக்கு ஏர்...