×

விக்னங்கள் அகற்றும் விநாயகிதேவி

லலிதா சஹஸ்ர நாமத்தில், “மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினி கன சேவிதா’’ என்ற நாமம் வரும். அதாவது அம்பிகையை சதா, அறுபத்துநான்கு கோடி யோகினிங்கள் சேவித்து கொண்டே அதாவது வணங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.அம்பிகையின் ஆணையை சிர மேல் கொண்டு செய்து முடிக்கும் தேவிகள் தான் யோகினிகள் ஆவார்கள். அதிக சக்தி வாய்ந்தவர்களும் கூட. அபூர்வமான பல சக்திகளை உடையவர்கள் இவர்கள். தேவியை உபாசனை செய்யும் சாதகனுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுக்கு தேவையான சித்திகளை தந்து, அம்பிகையை உணரவும் அடையவும் உதவுபவர்கள் இவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல கோடி இருந்தாலும், இந்த பல கோடி யோகினிகளில் முக்கியமான யோகினிகள் அறுபத்தி நான்கு பேர்கள் ஆவார்கள். அவர்களுள், அதிக சக்தி வாய்ந்த ஒரு யோகினியான விநாயகிதேவியைப் பற்றி காணுவோம் வாருங்கள்.

புராணங்களில் விநாயகி தேவி

அந்தகாசுரன் என்ற அரக்கன், பார்வதி தேவியை கடத்திச் சென்றான். அம்பிகையை மீட்க, சினம்கொண்ட சிவன், அந்தகன் மீது போர் தொடுத்துச் சென்று அவனை தாக்கினார். ஆனால் அங்கு தான் விபரீதமே நடக்கிறது. பூமியில் விழும் அந்தகனின் ஒவ்வொரு துளி இரத்தத்தில் இருந்தும் புதியதாக ஒரு அந்தகாசுரன் தோன்றினான்.இப்படி அவனது ஒவ்வொரு இரத்தத் துளியில் இருந்தும் தோன்றிய அந்தகாசுரனால் உலகமே நிறைந்தது. அப்போது ஈசனுக்கு உதவும் வகையில், பார்வதி தேவியானவள், அனைத்துத் தேவர்களையும் கட்டளையிட, அனைத்துத் தேவர்களும் தங்கள் தங்கள் சக்தியை ஒன்றுதிரட்டி, தங்களைப் போலவே ஒரு தேவியை தோற்றுவித்து, அந்தகனை அழிக்க ஈசனுக்கு
துணையாக அனுப்பினார்கள்.

அதன்படி, விநாயகப் பெருமான், தனது சக்தியை பெண் வடிவமாக திரட்டி, அந்தகாசுரனுடனான போரில் , தனது தந்தை சிவ பெருமானுக்கு உதவிபுரிய அனுப்பினார். இப்படி விநாயகரின் சக்தியாக போரில் ஈசனுக்கு உதவச் சென்ற தேவியே விநாயகி தேவி என்று சாதிக்கிறது சிவ புராணம், மச்ச புராணம் முதலிய நூல்கள். ஸ்கந்த புராணத்து, காசி காண்டம், அறுபத்தி நான்கு யோகிகளின் பட்டியலை தருகிறது. அந்த பட்டியலில், இந்த தேவி கஜானனி, விநாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

சப்தகன்னிகளும் விநாயகியும்

பொதுவாக பிராம்னி, மகேஷ்வரி, கௌமாரி, வாராஹி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டா என்ற ஏழு தேவிகளையே ஏழு மாதாக்களாக வழிபடும் மரபு உண்டு. மேலே நாம் கண்ட ஏழு பேரோடு, மஹாலக்ஷ்மி மற்றும் விநாயகி தேவியை சேர்த்து ஒன்பது மாத்ருகா தேவிகளாக வழிபடும் மரபும் இருக்கிறது. இந்த தகவலை, தேவிபுராணம் நமக்கு தருகிறது. இப்படி ஒன்பது மாத்ருகா தேவிகளை வணங்கும் போது, அவர்களில் ஒருவராக இருக்கிறார் இந்த விநாயகிதேவி.

பிற மதங்களில் விநாயகி தேவி

இந்து சமயத்தில் சக்தி கணபதி என்று விநாயகி தேவி வழிபடப்படுகிறாள். விநாயகரை முழு முதல் கடவுளாக வணங்கும் காணாபத்தியம் என்ற இந்து மதத்தின் பிரிவு ஓங்கி இருந்த காலத்தில் விநாயகி வழிபாடும் நன்கு செழித்து வளர்ந்ததாக வரலாற்று ஆர்வலர்கள் கருதுகிறார்கள். பௌத்த சமயத்தில், பெண் உடலோடும், யானைத் தலையோடும் இருக்கும் இந்த தேவி, “கணபதி ஹ்ருதயா’’ என்று பூஜிக்கப்படுகிறாள். அதே போல சமண சமயத்தவர்கள் கூட இந்த தேவியை பூஜித்து வழிபட்டதற்கான சான்றுகள் கிடைக்கிறது.

விநாயகி தேவியின் தோற்றம்

சிற்ப ரத்தினா என்னும் நூல், சக்தி கணபதியை பின்வருமாறு வர்ணிக்கிறது. சக்தி கணபதிக்கு யானைத் தலை, பருத்த வயிறு, சிந்தூர சிவப்பு வண்ணம், நன்கு அமைந்த பிருஷ்டம், பெரிய மார்புகள், இளமைத் துடிப்புடைய பெண்உடல், இடப்புறம் திரும்பிய யானைத் தலை, இரண்டு கைகள். அதில் வலக்கையில் தாமரை மொட்டு, தொங்கும் இடக்கை, என்று விளங்குவதாக
குறிப்பிடுகிறது.

விநாயகி தேவியை எங்கு தரிசிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், தானுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகி தேவியின் சிற்பம் இருக்கிறது. அதே போல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சுவாமி சந்நதியின் நுழைவாயிலின் வலப்புறம் இருக்கும் தூணில் ஒரு சிற்பம் இருக்கிறது. இது நின்ற கோலத்தில் இருக்கும் சிற்பம். தலையில் இருக்கும் மகுடம், சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. அதே போல இந்த தேவியின் திரு உருவம், ஒடிசாவில் உள்ள அறுபத்தி நான்கு யோகிகளின் கோயில்களில் காணப்படுகிறது. பெராகட் ஆலயத்தில் நடனமாடும் விநாயகி தேவியின் திரு உருவம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விநாயகி தேவியின் தத்துவம்

விநாயகி தேவியின் வாகனமாக கருதப்படுவது கழுதை ஆகும். கழுதை பொறுமையின் அறிகுறியாக விளங்குகிறது. இது சுமையை தாங்கிக் கொண்டு காளைமாட்டால் ஏற முடியாத மலைகளில்கூட ஏறி விடுகிறது. அதே போல யோகம் என்னும் எட்டாத மலை உச்சிக்கு, சாதகனை அழைத்துச் செல்ல, இந்த தேவி உதவி செய்கிறாள் என்பதை, இந்த தேவியினுடைய கழுதை வாகனம் காட்டிக் கொடுக்கிறது.

மேலும் இந்த தேவி, தன்னுடைய உபாசகன், செயற்கரிய சாதனைகளை செய்து முடிக்க உதவுகிறாள் என்பதையும் இந்த கழுதை வாகனம் காட்டுகிறது. இந்த யோகினிக்கு யானை தலை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த யானை தலை, வெறும் தகவல்கள் சேர்த்து வைத்துக் கொண்டு மனதை குழப்பிக் கொள்வதை விடுமாறு உபதேசிக்கிறது.

ஆழ்ந்த ஞானத்தை அகன்ற யானையின் நெற்றி குறிக்கிறது. சாதகனுக்கு ஆழ்ந்த ஞானத்தை இந்த தேவி வழங்குவாள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. யானை ஒரு நாள் முழுவதும் உண்டுகொண்டே இருந்தாலும், அத்தனை தீனியையும் செரிமானம் செய்யும் ஆற்றல் பெற்று இருக்கிறது. இல்லாவிட்டால் அத்தனை உணவும் வலிமையாக மாறாமல் சாணமாகி வெளியேறிவிடும். அதுபோல நாம் சேகரிக்கும் ஞானம், அனுபவமாக்கப்பட வேண்டும். கற்ற ஞானத்தை அனுபவத்தில் உணரவும், அதை நினைவில் வைத்திருக்கவும் உதவுபவள் இந்த விநாயகி தேவி. இந்த யோகினி ஒரு கையில் கபாலம் தாங்கி இருக்கிறாள். அதில் வழக்கமாக இருக்கும் ரத்தத்திற்கு பதிலாக சோம ரசம் இருக்கிறது. இடது கரத்தில் அழகான மலர் ஒன்று இருக்கிறது. இந்த யோகினி கபாலத்தில் தாங்கும் சோம ரசம் அற்புதமானது. மரணத்தை வென்ற பெருவாழ்வு வழங்கக்கூடியது. தன்னை உபாசிக்கும் சாதகனுக்கு நித்தியானந்த பெருவாழ்வு வழங்குபவள் இந்த தேவி என்பது இது மூலமாக விளங்கும்.

விநாயகிதேவியை வழிபடுவதால் வரும் நன்மை

தடைகளை தகர்த்து எறிந்து வெற்றிக்கனியை பறிக்க இந்த தேவி துணை இருப்பாள். யானை போன்ற உடல் வலிமையும், பெண்ணுக்கே உரிய அடக்கத்தையும் இந்த தேவி உபாசகனுக்கு அளிப்பாள். யானை நீண்ட ஆயுளோடு இருப்பது போல, இந்த தேவியும் தன்னடியாருக்கு நீண்ட ஆயுள் தருகிறாள். காரியத்தை செய்யும்போது, ஏற்படும் தடங்கல்களை இந்த தேவி தவிடு பொடி ஆக்குகிறாள்.

விநாயகி தேவியின் வேறு பெயர்கள்

இந்த தேவியை, ஐங்கினி அதாவது ஐந்து கரம் உடையவள் என்றும், வைநாயகி என்றும், விக்னேஸ்வரி என்றும், கஜானனா என்றும், விநாயகி என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

வாஞ்சா கல்ப லதா கணபதி

லலிதாம்பிகையும், விநாயகரும் சேர்ந்த வடிவமே வாஞ்சா கல்ப லதா கணபதி என்னும் வடிவமாகும். இதுவும் விநாயகி வடிவமும் ஒன்று என்று கருதுபவர்களும் உண்டு. அதை மறுப்பவர்களும் உண்டு. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த வடிவம் இது. இந்த திரு உருவமும், சற்றேறக் குறைய விநாயகி தேவியை போலவே இருக்கிறது. இந்த வாஞ்சா கல்ப லதா கணபதியின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். அம்பிகையின் பதினைந்து எழுத்து மந்திரம், பாலா மந்திரம், விநாயகர் மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல மந்திரங்களின் கலவையாக இந்த கணபதியின் மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை ஒரு முறை சொல்லி முடிக்கவே நாற்பது நிமிடங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்த வேளையில், இந்த வாஞ்சா கல்ப லதா கணபதி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

தனியாக ஒரு மந்திரத்தை ஜெபிப்பதை விட, அதை பல மந்திரங்களோடு சேர்த்து ஜெபிப்பது இன்னமும் அதீத பலன்களைத் தரும். இது பல அறிஞர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. அந்த வகையில் வாஞ்சா கல்ப லதா கணபதி மந்திரம், சக்தி வாய்ந்த அனைத்து மந்திரங்களின் கலவையாக இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.
வேண்டியவர், வேண்டியவற்றை வேண்டிய படியே வழங்கும் சக்தி உடையது இந்த தேவியின் மந்திரம். அதை இந்த தேவியின் பெயரில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். வாஞ்சா என்றால் ஆசை. கல்ப லதா என்றால் கற்பக மரம். அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யும் கற்பக மரம் போல, ஆதி சக்தி லலிதா தேவியும் மகா கணபதியும் சேர்ந்த வடிவமான வாஞ்சா கல்ப லதா கணபதி இருக்கிறார். இவரது ஹோமம், நான்கு ஆகுதிகளை முக்கியமாக கொண்டது. இந்த ஹோமம் அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி அனைத்து விதமான இன்பங்களையும் தருகிறது என்பது பலர் அனுபவத்தில் கண்ட உண்மை.

எப்படி வணங்குவது

அற்பத்து நான்கு யோகினிகளை தனித்தனியாக வணங்குவதை விட அம்பிகையை உள்ளம் உருக வணங்கினாலே போதும். அம்பிகையின் சேவகர்களாக இவர்கள் இருப்பதால், அம்பிகையின் அருள் கிடைத்தால், யோகினிகள் அருளும் தானாக கிடைக்கிறது. இருப்பினும் தனியாக விநாயகி தேவியை வணங்க விரும்புபவர்கள் ஒரு தேர்ந்த குருவிடம் உபதேசம் பெற்று விநாயகி தேவியை பூஜிப்பதே சிறந்தது.

ஜி.மகேஷ்

 

The post விக்னங்கள் அகற்றும் விநாயகிதேவி appeared first on Dinakaran.

Tags : Vinayakidevi ,Lalita Sahasra ,Maha Sathush Shashti Kodi Yogini Kana Sevita ,Sada ,Ambika ,
× RELATED வாழ்வு முழுவதும் பாதுகாப்பை அருளிடும் நாமம்