×

பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம்: சீமான் பாய்ச்சல்


செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாதக சார்பில் கடந்த 2022ல் நடந்த ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக பிரம்மதேசம் போலீசில் பாமக ஒன்றிய செயலாளர் சுரேஷ் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர், நேற்று காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, மாஜிஸ்திரேட் விசாரணையை மார்ச் 4க்கு தள்ளி வைத்து அன்று ஆஜராகி புகாருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர், நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சீமானிடம், விஜய்யை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘தமிழ்நாட்டில் எத்தனை ஆறு, எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை சமூக மக்கள், அவர்களின் பிரச்னைகள் பற்றி என்ன தெரியும். எத்தனை மக்கள், எவ்வளவு வாக்கு சதவீதம் என எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுத்து என்ன செய்து விடப் போகிறார். தமிழகத்தை ஆண்ட முந்தைய தலைவர்கள் காமராஜர், அண்ணா போன்றோர் என்ன வியூகம் வகுத்தார்கள். உடலில் கொழுப்பு இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பணக்கொழுப்பு இருந்தால், வாய் கொழுப்பு இருந்தால் இது எல்லாம் தேவைப்படும். அதை பற்றி பேசி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டாம்’ என்றார்.

The post பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம்: சீமான் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Seeman Phaichal ,Cheyyar ,Seeman ,Brahmadesam ,Rajendra ,Chola ,Tiruvannamalai district ,
× RELATED பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத...