சென்னை: கோடையில் பொதுமக்கள் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மார்ச் இறுதிக்குள் செயல்திட்டத்தை இறுதி செய்து வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளுக்கு தனியாக செயல் திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடையில் வெப்ப அலையை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் பேரிடர் மேலாண்மைத்துறை ஆலோசனை நடத்தியது. பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், தொழிலாளர் நலன், பேரிடர் மீட்பு, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பாக கோடை காலங்களில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அதற்கான பல்வேறு விதமான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் சராசரி வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களின் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் எனவும், அதற்கு சிகிச்சை அளிக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவமனைக்கும், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இதனால் வருகின்ற நாட்களில் உயர் வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுய நினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சில நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post கோடையில் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.