டெல்லி : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு 12 கேள்விகளை எழுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர் நியமனங்களில் தலையீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் ஒன்றிய அரசு தனது எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் ஆளுநருக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 10ம் தேதி விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி பிறப்பித்த உத்தரவில், நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு..
*திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
*அனைத்துவித மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
*தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
*பரிந்துரையின்போது, அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
*மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூற முடியுமா?
*குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
*அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
*ஜனாதிபதியால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி?
மேற்கண்ட கேள்விகள் மீது ஒன்றிய அரசு, ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரானவழக்கில் ஒன்றிய அரசுக்கு 12 கேள்விகளை எழுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.