நன்றி குங்குமம் தோழி
தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்துக் குறைவுதான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும்
கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்கு சத்துக்குறைவுதான் முக்கிய காரணம். சுவையாக இருக்கும் உணவினை நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் போது அதில் போதிய அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை. இதனால் ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.
தலைமுடிக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் முடி உலர்ந்த தன்மையை அடைய வாய்ப்புள்ளது. நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னையை கண்டறிந்து, சிகிச்சை மேற்ெகாண்டால் பலன் கிடைக்கும்.அதிகமாக முடி உதிரும் பிரச்னை இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. காரணம், சிலருக்கு உடலில் தேவையான ஹார்மோன்கள் சுரக்காது. அதில் மாற்றம் ஏற்பட்டாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது.
புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும்.தலைமுடி வளர ஆரோக்கியம் அவசியம் தான் என்றாலும், நாமும் அதனை பாதுகாப்பது முக்கியம். நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
*பலர் குளிக்கும் முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்ற மறக்கிறார்கள். இதனால் கூந்தலில் அதிக அளவு சிக்கு ஏற்படும். அதை நாம் கவனமின்றி அகற்றினால் அதன் வேர்க்கால்களை பாதிக்கலாம்.
*மார்க்கெட்டில் விற்கப்படும் ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கக்கூடிய ஆய்வுக்கூடமல்ல நம்முடைய தலை. தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு பயன்படுத்தும் போது நிறைய தண்ணீர் கொண்டு தலைமுடியினை அலச வேண்டும்.
*தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம். கண்டிஷனரை முடியின் வேர்களில் பயன்படத்தக்கூடாது. அதன் நுனிப்பாகத்தில்தான் தடவ வேண்டும். கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும்.
*தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து தலைமுடியை கழுவ வேண்டும். இது தலைமுடியை மிருதுவாகவும், பட்டு போன்று பளபளக்க செய்யும்.
*மருதாணியை தலையில் ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்தக் கூடாது. முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு மறுநாள் மருதாணியை தலையில் தேய்த்து ஷாம்பு பயன்படுத்தாமல் அலசினாலே போதுமானது.
*குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவக்கூடாது. ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள்.
*ஹேர் ட்ரையரை முடியின் நுனிப்பாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாறாக வேர் பாகத்தில் பயன்படுத்தலாம். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். அதே சமயம் தலைமுடியினை இயற்கை முறையில் அல்லது மின்விசிறி கொண்டு காயவைக்கலாம். அடிக்கடி ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.
*உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது நல்லது. காரணம், அதில் உள்ள நீக்கப்படாத அழுக்கு உங்க தலைமுடியின் பளபளப்பினை மங்க செய்யும்.
*தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தவுடன் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதற்கு பதில் கை விரல்கள் கொண்டு முதலில் சிக்கினை நீக்கிய பிறகு சீப்பினை பயன்படுத்தலாம்.
*சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரிப்பது அவசியம்.
*தலைமுடியில் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முடிகளை அழுத்தமாக தேய்ப்பது மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடி மற்றும் தலை மண்டைக்கு மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்யலாம்.
*பலருக்கும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லை. அதனால் தலைக்கு மட்டுமல்ல உடலுக்கும் பாதிப்பு. வாரத்தில் ஒரு முறை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்வது அவசியம். தலை முடி மட்டுமில்லாமல் சருமத்தையும் பாதுகாக்க முடியும்.
The post வாரம் ஒரு முறையாவது தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது அவசியம்! appeared first on Dinakaran.