மயிலம், பிப். 12: மயிலம் முருகன் கோயிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் திரளான பக்தர்கள் காவடி சுமந்தபடி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று மயிலம் முருகன் கோயில். இந்த கோயிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு உற்சவ பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோயில் மலையடிவாரத்திலுள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு தீர்த்த குளக்கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி பால் மற்றும் பன்னீர் காவடி எடுத்து ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டபடி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மயிலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். இதை தொடர்ந்து கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு மயிலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post மயிலம் முருகன் கோயிலில் கோலாகலம்: தைப்பூச விழாவில் காவடி சுமந்தபடி தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.