துரைப்பாக்கம்: கொட்டிவாக்கம் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை, போலீசார் கைது செய்து ரூ1.38 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ் காந்தி சாலை பகுதிகளில் உள்ள தனியார் ஓட்டல்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இந்த சூதாட்டத்தின்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. அதன்பேரில், போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கொட்டிவாக்கம் புதிய கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து, சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஓட்டல் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ1 லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 6 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 14 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் திருப்போரூர், சைதாப்பேட்டை, போரூர், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த சுரேஷ் (36), மணி (40), பாண்டியன் (32), ராம்குமார் (40), தர் (60), ரகுமான் (34), நிர்மல் (29), தமிழ்அருள் (44), அப்பு (35), ராஜா (27), வினோத் (29), மணி (34), ராஜேஷ் (36), மூர்த்தி (54) என்பதும், இவர்கள் 14 பேரும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ் காந்தி சாலை பகுதிகளில் ஓட்டல்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருடமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், கைதான 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், அனைவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
The post கொட்டிவாக்கம் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் பிடிபட்டனர்: ரூ1.38 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.