×

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு நாம் தமிழர் நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர், நாம் தமிழர் கட்சியில் ஐடி பிரிவு மாநில நிர்வாகியாகவும் உள்ளார். இவரிடம் பயிற்சி ஊழியராக ஒரு பெண் கடந்த 2024ல் சேர்ந்தார்.

அந்த பெண் தனது ஒரிஜினல் சான்றிதழ்களை நிறுவனத்தில் கொடுத்திருந்தார். இந்நிலையில், அந்த பெண்ணிடம் சக்திவேல் ஆபாசமாக பேசியதாகவும், பெண்ணின் அந்தரங்கங்களை பற்றி தொடர்ந்து பேசியதாக, தனது ஆசைக்கு இணங்கினால் இரட்டை சம்பளம் தருவதாகவும், இல்லையென்றால் சான்றிதழ்களை கிழித்து விடுவதாகவும் கூறியதாக அந்த பெண் கிண்டி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 28ம் தேதி சக்திவேலை கிண்டி மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சக்திவேல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது மேலும் சில பெண்கள் புகார் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் தர மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு நாம் தமிழர் நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar ,Chennai Sessions Court ,Chennai ,Chennai Primary Sessions Court ,Guindy, Chennai… ,
× RELATED சம்மனை கிழித்த விவகாரம் சீமான் வீட்டு...