திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்கவேல், வைரக்கல் முத்து, மரகதமாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால், பன்னீர், மயில் காவடிகளுடன் திருத்தணியில் குவிந்தனர். அதிகாலை 4 மணி முதலே மலைக்கோயிலில் மாட வீதிகளில் `அரோகரா, அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மாட வீதிகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பியதால், பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 சிறப்பு கட்டண வரிசையில் பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். காவடி எடுத்தும், பால்குடம் சுமந்து வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச விழாவையொட்டி, காலை முதல் இரவு வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மலைப் பாதையில் வாகன நெரிசலை தடுக்கும் வகையில் அனைத்து வாகனங்களையும் மலையடிவாரத்தில் நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், சாதாரண பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விஐபி தரிசன மார்கம் முழுமையாக அடைக்கப்பட்டு, சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கினர். தைப்பூச விழாவையொட்டி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை நெற்கதிர் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் மலைக்கோயில் மாடவீதியில் மேளதாளங்கள் முழங்க வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகன சேவை மற்றும் தங்கத் தேர் பவனி வந்தார். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமையான நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கு சுமார் 3 கிமீ தூரம் வரையில் நீண்ட வரிசையில் வந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள், `அரோகரா, அரோகரா’ என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
* திருநங்கைகள் தகராறு
சிறுவாபுரி முருகன் கோயிலில் தைப்பூச தினமான நேற்று 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இங்கு, சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் யாசகம் பெற்று வருகின்றனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் திருநங்கைகளை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊத்துக்கோட்டை பெண் டிஎஸ்பி சாந்தி, திருநங்கை ஒருவரை கன்னத்தில் அறைந்த நிலையில் மற்ற திருநங்கைகள் அனைவரும் பெண் டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், திருநங்கைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post விண்ணை முட்டியது ‘‘அரோகரா’’ கோஷம் திருத்தணி, சிறுவாபுரி கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்; காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.