×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருப்பு மூட்டி தர்ணாவில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கவும், பிற துறைகளில் பணிகளுக்காக அதிகாரிகளை பார்க்க வந்து செல்கின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நேற்று முன்தினம் 24 மணி நேர தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் தலைவர் திவ்யா தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு பேசினர். பொது மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்காத நிலையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வழிப்பாதையை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட யார் அனுமதி அளித்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் 24 மணி நேர போராட்டம் என்பதால் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இது என்ன மாவட்ட கலெக்டர் அலுவலகமா? அல்லது டூரிஸ்ட் ஸ்பாட்டா என கேள்வி எழுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அத்தனை துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசின் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்கள் குறைகளை நிறைவேற்றித் தரும் அரசு ஊழியர்களே தீ மூட்டி குளிர் காய்வது வேதனையாகவும், வேடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த தீயானது காற்றில் பரவி கலெக்டர் அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படாதா என்றும், இது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருப்பு மூட்டி தர்ணாவில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Collector ,Tamil Nadu Government Employees' Union ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்