×

பிரதமர் மோடி பெருமிதம்: இந்தியா 3வது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடு


புதுடெல்லி: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய எரிசக்தி வாரம் தொடர்பான நிகழ்ச்சி தொடர்பாக பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோவை பிரதமர் அலுவலகம் நேற்று ஒளிபரப்பு செய்திருந்தது. இதையடுத்து அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது: இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் சூரிய சக்தி உற்பத்தி திறன் தற்போது 32 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா 3வது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாகவும் உள்ளது. கூடுதலாக, நமது புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றல் திறன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக பெட்ரோலில் 20சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடையும் பாதையில் இந்தியா உள்ளது. மேலும் ”மேக் இன் இந்தியா”முயற்சியின் மூலம் உள்ளூர் விநியோகம் மற்றும் உற்பத்தியை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய ஒளி மின்னுற்பத்தி, தொகுதி உற்பத்தி ஆகிய திறன்கள் கணிசமாக விரிவடைந்துள்ளது. அதாவது 2 ஜிகாவாட்டில் இருந்து 70 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இன்று இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில் வேகமாக வளரத் தயாராக உள்ளது.

இந்தியாவிடம் 500 மில்லியன் மெட்ரிக் டன் நிலையான மூலப்பொருள் உள்ளது. இந்தியா ஜி20 தலைமை வகித்த காலத்தில், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதுதொடர்ந்து விரிவடைந்து வருகிறது. குறிப்பாக 28 நாடுகளும், 12 சர்வதேச அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன. இது கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறந்து விளங்கும் மையங்களை அமைத்து வருகிறது என்றார்.

The post பிரதமர் மோடி பெருமிதம்: இந்தியா 3வது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடு appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,New Delhi ,Prime Minister Narendra Modi ,France ,India Energy Week ,Prime Minister's Office ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED மோடி அரசில் ஊழல்வாதிகள் சிறையில்...