- தைப்பூச தேர் ஊர்வலம்
- பழனி
- தைபுசம் திருவிழா
- தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில்
- திண்டுக்கல் மாவட்டம்
- இறைவன்
- முருகன்

பழநி: பழநியில் இன்று நடக்கும் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு 8 மணிக்கு நடந்தது. சிம்ம லக்னத்தில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் குவிய துவங்கினர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவை காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம் – பழநி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பழநி வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
சாலை நெடுகிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், பழங்கள், பால், டீ, பொறி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண தரிசனம் ரத்து: இலவசமாக பஸ் சேவை
பக்தர்களின் நலனுக்காக நேற்று (பிப். 10) முதல் பிப். 12 வரை சண்முக நதி மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பழநி பஸ் நிலையத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இலவச பஸ் சேவை நடைபெறும். பிப். 12 வரை கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ₹20 மற்றும் ₹200 கட்டண தரிசனம் 3 நாட்களுக்கு கிடையாதென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதயாத்திரை பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி
பழநி அருகே ஆயக்குடியில், பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். இதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கால் வலியை போக்கும் மருந்துகள் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெடுந்தூரம் நடந்து வருவோருக்கு கால்களில் மருந்துகளை தடவியும் சேவை செய்கின்றனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இந்துக்கள் – இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நடைபெறும் இச்சேவை பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்கு சேவை செய்யும் நிகழ்வு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
The post பழநியில் இன்று தைப்பூச தேரோட்டம்: 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
