×

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது: பிரியங்கா காந்தி கருத்து


மலப்புரம்: மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்கின் ராஜினாமா நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கேரளமாநிலம் வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி தனது தொகுதியில் 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘மணிப்பூர் பாஜ முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இது நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.மாநிலத்தில் 2 ஆண்டுகளாக கலவரம் நீடிக்கிறது. கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்’’ என்றார்.

சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி,‘‘இது தாமதமான முடிவு. மணிப்பூர் மக்கள்,அவருடைய சொந்த கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று 2 ஆண்டுகளாக கோரி வருகின்றனர். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட இருந்தது.அவருடைய கட்சி எம்எல்ஏக்களும் ஆதரித்து வாக்களிப்பார்கள் என அஞ்சினார். இதனால் தான் ராஜினாமா செய்ய நிர்பந்தம் ஏற்பட்டது’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொ ய்த்ரா,‘‘மணிப்பூர் வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயத்தின் முடிவு இது.வெட்கமற்ற ரத்தவெறிதான் அவரைத் தாங்கிக் கொள்ள வைத்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அவமானத்தை எதிர்கொள்ள விரும்பாததால் அவர் ராஜினாமா செய்துள்ளார்’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர்,‘‘ மணிப்பூரைப் பொறுத்தவரை, வன்முறை வெடித்ததிலிருந்து, முதல்வர் பிரேன் சிங்கை நீக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். நிலைமையை அவர் சரியாக நிர்வகிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது” என்றார். சமாஜ்வாடி எம்பி ராஜிவ்ராய்,‘‘ மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரேன் சிங் மீது வழக்கு பதிய வேண்டும்’’ என்றார்.தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) எம்பி பவுசியா கான்,‘‘பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்களை சந்தித்து தேசம் அவர்களுடன் நிற்கிறது என ஆறுதல் அளிக்க வேண்டும்’’ என்றார்.

The post மணிப்பூர் முதல்வர் ராஜினாமா நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது: பிரியங்கா காந்தி கருத்து appeared first on Dinakaran.

Tags : Manipur ,Chief Minister ,Priyanka Gandhi ,Malappuram ,Congress ,Manipur Chief Minister ,Pranab Singh ,Kerala ,Wayanad ,
× RELATED ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே...