சென்னை: ராயப்பேட்டை, முத்தையா 2வது தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமா (55). இவர், துறைமுகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு தூங்கி மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, யாரோ பால்கேனி வழியாக வீட்டில் நுழைந்து பீரோவில் வைத்திருந்த சுமார் 110 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அதே தெருவிலுள்ள ஒரு வீட்டின் 3வது தளத்தில் உள்ள வீட்டிலும் ஒரு நபர் செல்போன் திருடிச் சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், இணை ஆணையர் (கிழக்கு மண்டலம்) தனிப்படை அமைத்து ஐஸ் அவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடங்களில் தீவிர விசாரணை செய்தனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்ததில் 2 திருட்டிலும் ஈடுபட்டது பழைய குற்றவாளி எனத் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு 2 வழக்குகளிலும் தொடர்புடைய சென்னை, ராயபுரம், பகுதியை சேர்ந்த ராஜு (எ) பாக்கு ராஜு (37) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் ராஜு கடந்த ஜனவரி மாதம் ஜாம்பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் 4 செல்போன்கள் திருடி கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ஐஸ் அவுஸ் பகுதியில் வீடுபுகுந்து நகைகளை திருடிய வாலிபர் பிடிபட்டார் appeared first on Dinakaran.
