- திருமாவளவன்
- சென்னை
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல்
- சட்டமன்ற உறுப்பினர்
- விசி
- சந்திரகுமார்
- சென்னை செயலகம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருமாவளவன்…
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். தொடர்ந்து நான்கு கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடாமல் பின்வாங்கியதற்கு சங்க் பரிவார்களின் சூழ்ச்சி தான் காரணம் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து திமுகவா, திமுகவை எதிர்த்து நிற்கிற அரசியல் கட்சியா என்ற விவாதத்தை நகர்த்தினார்கள்.
அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. தமிழக முதல்வரை சந்தித்து நான்கு முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை விசிக சார்பாக வழங்கியிருக்கிறோம். வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை இறுதியானது அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை அமைந்திருக்கிறது என்ற வலி அந்த கிராமத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஓய்வுபெற்ற ஒருவரை கொண்டு நீதிவிசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும். தீவிர விசாரணை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன, ஏலம் விடப்படுகின்றன. அவற்றில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. வணிகம் செய்து தொழில் செய்ய ஆர்வமுள்ள பட்டியலின பழங்குடியின மக்கள் பயன் பெறுகிற வகையில் தனியாக வணிக வளாகங்கள் கட்டி தரப்பட வேண்டும். அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளின் சதவிகிதம் பெருகி வருகிறது. இந்த சூழலில் சாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறைப்படி சட்டப்பூர்வ அடிப்படையில் மேற்கொள்ள முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறோம்.
The post வேங்கைவயல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.