போபால்: பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எம்பிஏ பட்டதாரி பெண் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்தூரில் வசிக்கும் பரினிதா ஜெயின் (23) என்ற இளம்பெண்ணும் கலந்து கொண்டார். இசை கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, பரினிதா ஜெயின் உள்ளிட்ட சில பெண்கள் மேடையில் ஆட்டம் போட்டனர்.
‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற பாலிவுட் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய போது பரினிதா ஜெயினும் குத்தாட்டம் போட்டார். திடீரென அவர் மேடையில் சரிந்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர், அவருக்கு சிபிஆர் (கார்டியோபல்மோனரி ரெசஸிடேஷன்) முதலுதவி கொடுக்க முயன்றனர்; ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக பரனிதாவை மீட்டு அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரனிதா ெஜயின் இறந்துவிட்டார். எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு டுகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
அவரது இளைய சகோதரர்களில் ஒருவர் தனது 12 வயதில் மாரடைப்பால் இறந்தார். தற்போது பரினிதாவும் மாரடைப்பால் விழா மேடையில் சரிந்து விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில், அகர்-மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்தார். இதேபோல், இந்தூரில் யோகா நிகழ்ச்சியின் போது மேடையில் நடனமாடிய 73 வயது முதியவர் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரடைப்பால் திடீரென இறப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது மாரடைப்பால் எம்பிஏ பட்டதாரி பெண் மரணம் appeared first on Dinakaran.