×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தைத்தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. `ரங்கா ரங்கா’ கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 5ம் தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கோயில் மண்டபத்தில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 5 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். காலை 5 மணி முதல் காலை 5.45 மணி வரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின், காலை 6 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

அப்போது ஏராளமான பக்தர்கள் ரங்கா, ரங்கா விண்ணதிர வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணி அளவில் நிலையை அடைந்தது. நாளை(11ம் தேதி) சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான நாளை மறுநாள்(12ம் தேதி) நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருவார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தைத்தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Srirangam Ranganathar Temple ,Thaitherotum Kolakalam ,Tiruchi ,Thaitherotam ,Thaither Festival ,Puloka Vaikundam ,Srirangam Ranganathar Temple Thaitherotum Kolakalam ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...