×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும்? மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் வைத்துவிட்டு, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியுமா என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்பது உள்ளிட்ட வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வருகிறார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்திலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு அனுப்பிய 12 மசோதாவும் சட்டத்திற்கு புறம்பாக இருக்கிறதா? என்பது உட்பட ஆளுநருக்கு சரமாரி கேள்வி எழுப்பியதோடு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் இன்று நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோரின் வாதத்தில், ‘மசோதாக்களை மீண்டும் சட்ட பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது.

மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வகையில் நான்காவதாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும். அப்படி அரசியல் சாசனம் கூறவில்லை என முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டியதோடு, அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை இந்த விவகாரத்தில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை முடிவுபடிதான் ஆளுநர் செயல்பட முடியும் என்று ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. மேலும் சட்டபேரவையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.

அவர் ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படுவது தான் கடமையாகும். ஆனால் அதனை அவர் செய்ய தவறிவிட்டார். மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில், பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அப்படி என்றால் வேந்தருக்கு அதிகாரம் இருக்கிறது எனில், எதற்காக அவர் அரசிடம் விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தாமல் குழு அமைத்தது தொடர்பாக கேள்வி எழுப்ப வேந்தருக்கு அதிகாரம் உள்ளதே. இதில் தவறு எங்கு உள்ளது. மேலும் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இதுபோன்ற சூழலில் எப்படி அவர் மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு எப்படி அனுப்பி வைத்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் வைக்கப்படும் வாதங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை. முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் மசோதாவை நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என முன்னதாக வாதங்களை வைத்தீர்கள்.

அப்படி என்றால் செல்லாத ஒன்றை எப்படி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்’ என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், ‘துணை வேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிட்டு அதனை தடுக்கும் விதமாக ஆளுநர் செயல்படுகிறார். எனவே வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது.

ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்’ என்றார். அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, ‘பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு என்பது அவரது அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். அதாவது அதிகாரம் அனைத்தையும் மாநில அரசே வைத்து கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது. அதனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

மேலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை. முரண்படுகிறது என்று ஆளுநர் நினைத்ததால் தான் அவர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘மசோதா மீது எடுக்கும் முடிவை ஏன் வெளிப்படையான முறையில் மாநில அரசுக்கு ஆளுநர் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்பட்ட மசோதா சரியாக உள்ளது. அதில் எந்த முரண்பாடுகளும் காணப்படவில்லை.

மறுபரிசீலனை செய்யவும் திருப்பி அனுப்பப்படவில்லை. இருப்பினும் மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, அதன் பின்னர் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க மசோதாக்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது என்ன மாதியான நடைமுறை?. இதனை எப்படி ஏற்க முடியும்? என்றனர். இதையடுத்து அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ‘மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் அதிகாரத்தை விடுத்து திருத்த மசோதா நிறைவேற்றிய பின்னரும், ஆளுநர் தனது தலைமையின் கீழ் துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க அரசிடம் தெரிவிக்கப்பட்டது’ என தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘துணைவேந்தர்கள் நியமன தேர்வு குழு உள்ளிட்ட மற்ற பிரச்னைகளுக்குள் தற்போது செல்லாமல், அரசியல் சாசன பிரிவு 200 குறித்த சரியான விளக்கம் குறித்து மட்டும் தற்போது விவாதிக்கலாம்’ என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,Governor ,R.N. Ravi ,Delhi ,Governor R.N. Ravi ,Dinakaran ,
× RELATED ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு...