பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக நீரில் கலந்துள்ள ரசாயன கழிவுகள் கெட்டிப்பட்டு, தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்து படர்ந்துள்ளன. இதனால் ஆற்றங்கரையோரங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓடப்பள்ளி கதவணையின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் தேங்கியுள்ளது.
ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனைகள், நகராட்சி சாக்கடைகள், நகராட்சி சாக்கடைகளின் கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் தேங்கியுள்ளதால், காவிரி ஆறு தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது.
பள்ளிபாளையம் சாயச்சாலைகள் இரவு பகலாக தொடர்ந்து இயங்கி, திருப்பூர் பெருநிறுவனங்களின் பனியன் துணிகளுக்கு வின்ஞ், ஜிகர் போன்ற கனரக இயந்திரங்களை பயன்படுத்தி கட்டுக்கடங்காத கழிவுகளை வெளியேற்றி வருகின்றன.
கோடை நெருங்கியுள்ள நிலையிலும், இங்குள்ள சட்டவிரோத சாயப்பட்டறைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் மாசுகட்டுப்பாட்டு துறையினர் தோல்வியடைந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சாக்கடையின் மூலம் பல மில்லியன் லிட்டர் சாயக்கழிவுகள் வெளியேறி, காவிரி ஆற்றில் தேங்கியுள்ளன. கடந்த நான்கு நாட்களாக காலை நேரத்தில் முன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
8 மணிவரையிலும் மூடு பனி போர்த்தியுள்ளதால், வெளியேற வழியின்றி தேங்கியுள்ள காவிரி ஆற்றுநீரின் தன்மை அதிகமாக குளிர்ந்து ஜில்லிட்டுள்ளது. நீர் மிகவும் குளிர்ந்துள்ளதால், சாயக்கழிவுகளில் கலந்துள்ள ரசாயனங்கள் நீருடன் கலக்காமல் தனித்து மிதந்து, தண்ணீரின் மேற்பரப்பில் படலமாக படர்ந்துள்ளது. இதனால் நீரின் தன்மை கெட்டு நாற்றமெடுத்துள்ளது.
இதனால் காவிரி கரையோரங்களில் வாழும் மக்களுக்கு பெரும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வரும், சாயக்கழிவுகளை சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக கூட நிறுத்தாமல் அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் காப்பதால், ஆற்றுநீர் முழுமையாக கெட்டு வருகிறது.
நீரின் மேற்பரப்பில் மிதந்து வரும் இந்த ரசாயன கழிவுகள் கரையோரங்களில் காய்ந்து படிந்து, சுற்றுச்சூழலை பாதிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கோடை வறட்சியால் குடிநீர் தேவைக்காக குடங்களுடன் மக்கள் சாலைக்கு வருவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
15ஆண்டுக்கு முன் குடிநீருக்காக போராடிய மக்களை கலைக்க தடியடி நடத்தி கலைத்த வரலாற்று நிலைக்கு, பள்ளிபாளையம் தள்ளப்பட்டுவிடும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத சட்டவிரோத சாயச்சாலைகளை பாரபட்சம் இல்லாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை உண்டா? அதிகாரிகள் மவுனம்
குடிநீர் தேவையை கருத்தில் கொள்ளாமல் காவிரி ஆற்றை சாக்கடையாக மாற்றும் பணியில் மனிதாபிமானமில்லாமல் செயல்படும் சட்டவிரோத சாயச்சாலைகள் குறித்து, கடந்த வாரம் தினகரனில் செய்தி வெளியானது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வெளியாகும் சாயக்கழிவுகள் பிரச்னை குறித்து, மூன்று நாட்கள் முன்பு குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டுதுறை மற்றும் ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் ஒட்டமெத்தை பகுயில் உள்ள சாயச்சாலைகளில் ஆய்வு செய்தனர். வின்ஞ், ஜிகர் இயந்திரங்கள் இயக்கப்படுகிறதா என உறுதி செய்தனர்.
சாயச்சாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி முறைகேடாக வீட்டுக்கான மின் இணைப்பில் இயந்திரங்கள் இயக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி ரகசியமாக ஆலோசனை நடத்தினர். இது குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்ட போது, பதில் ஏதும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
The post காவிரி ஆற்றில் துர்நாற்றம்-ரசாயன கழிவுகள் மிதப்பு appeared first on Dinakaran.